நாடாளுமன்றத்தில் வாக்களிக்கும் போது, கட்சியின் நிலைப்பாட்டிற்கு இணங்காது, சொந்த முடிவு எடுப்பது கட்சி தாவல் எதிர்ப்புச் சட்டத்தின் மூலம் தீர்க்கப்படக்கூடிய நடவடிக்கைகளில் ஒன்றாகும் என்று, பெங்கெராங் நாடாளுமன்ற உறுப்பினர் அசலினா ஓத்மான் சைட் குறிப்பிட்டார்.
முகநூல் பதிவு ஒன்றில், மக்களவையின் முன்னாள் துணை சபாநாயகரான அசலினா, முன்மொழியப்பட்ட அச்சட்டம் பற்றிய பொதுவான கேள்விகளைப் பகிர்ந்து கொண்டார்.
கட்சி தாவல் சம்பவங்களின் எடுத்துக்காட்டுகளில், “தான் சார்ந்த அரசியல் கட்சியின் பேச்சு அல்லது அறிவுறுத்தல்களைப் பின்பற்றாமை, வாக்களிக்கும் முடிவுகளில் தங்கள் சொந்த நிலைப்பாட்டை எடுப்பது” போன்றவை அடங்கும் என்று அவர் கூறினார்.
கட்சி தாவலைத் தடுக்க, ‘மறுதேர்தலுக்கு அழைப்பு விடுத்தல்’ அல்லது ‘பணிநீக்கத் தேர்தல்’ நடத்தப்பட வேண்டும் என்ற திட்டத்தை அசலினா மீண்டும் வலியுறுத்தினார், இது அத்தொகுதி வாக்காளர்கள், தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை, சேவை விதிமுறைகள் முடிவதற்குள் நீக்கம் செய்ய அனுமதிக்கிறது.
மாற்றாக, மலேசியத் தேர்தல் முறையின் ஒட்டுமொத்த மாற்றத்தால், சுயேட்சையாக ஓர் இடத்தில் போட்டியிடுபவர்களை விட, அரசியல் கட்சிகளுக்குதான் மக்கள் வாக்களிக்கிறார்கள் என்பதைக் காணலாம் என்று அவர் கூறினார்.
“ஒட்டுமொத்த வாக்குகளின் அடிப்படையில் கட்சி வெற்றி பெறும்,” என்றார் அவர்.
ஒட்டுமொத்தமாக, கட்சி தாவல் எதிர்ப்புச் சட்டம், தனிநபர்களின் நலனுக்காக மக்களின் ஆணையைத் தியாகம் செய்வதைத் தடுக்கும் என்றும், அதே நேரத்தில் நாடாளுமன்றத்தில் அரசியல் கட்சிகளுக்கிடையேயான அதிகாரச் சமநிலை மீதான அதிர்ச்சியைக் குறைக்கும் என்றும் அசலினா வாதிடுகிறார்.
பிஎன் நிர்வாகத்தின் போது, சட்ட அமைச்சராக இருந்த அசலினா, கட்சி தாவல் எதிர்ப்புச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தார்.
துணை சபாநாயகர் பதவியிலிருந்து விலகுவதற்கான ஊகங்கள் இருந்தபோதிலும், அசலினா பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப்பின் அமைச்சரவையில் பட்டியலிடப்படவில்லை.
கடந்த வெள்ளிக்கிழமை, சட்டத்துறை துணை அமைச்சராக நியமிக்கப்பட்ட மாஸ் எர்மியதி சம்சுதீனை வாழ்த்திய அசலினா, கட்சி தாவல் எதிர்ப்புச் சட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதை நினைவூட்டினார்.
மாஸ் எர்மியாதி, 14-வது பொதுத் தேர்தலில், மஸ்ஜித் தானா நாடாளுமன்றத் தொகுதியில், தேசிய முன்னணி (தே.மு.) சீட்டில் வெற்றி பெற்றார், ஆனால் பக்காத்தான் ஹராப்பான் அரசு அமைத்த சிறிது காலத்தில், தே.மு.யில் இருந்து வெளியேறி பெர்சத்து கட்சியில் தன்னை இணைத்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.