ஆடாம் : மலேசியா கோவிட் -19 தடுப்பூசியை உற்பத்தி செய்யும்

மலேசியாவிற்குக் கோவிட் -19 தடுப்பூசியை உற்பத்தி செய்யும் திறன் உள்ளது, பொது சுகாதாரத் துறையில் நிபுணத்துவம் பெற்ற நாட்டின் விஞ்ஞானிகளின் ஆற்றலைத் திரட்டி, அதனை உற்பத்தி செய்ய முடியும்.

தொற்றுநோய் மேலும் பரவாமல் தடுக்க, நாட்டிலேயே கோவிட் -19 தடுப்பூசி தயாரிப்பது மிகவும் முக்கியம் என்று முன்னாள் சுகாதார அமைச்சர் டாக்டர் ஆடாம் பாபா கூறினார்.

இது சம்பந்தமாக, கோவிட் -19 தடுப்பூசியைத் தயாரிப்பதற்காக மோஸ்தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் (ஆர் & டி) கவனம் செலுத்தும் என்று பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் சமீபத்தில் அறிவித்ததை வரவேற்பதாக அவர் கூறினார்.

“நாட்டில் முதல் தடுப்பூசியின் உற்பத்தி மிகவும் முக்கியமானது, நாம் முன்னேற வேண்டும் மற்றும் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும், ஏனென்றால் அறிவியல் கண்டுபிடிப்புகளில் ‘முன்னேற்றத்தை’ உருவாக்கக்கூடிய விஞ்ஞானிகள் நம்மிடம் உள்ளனர்,” என்று அவர் கூறினார்.

திங்கட்கிழமை, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சராக (மோஸ்தி) பதவியேற்க உள்ள தெங்காரா நாடாளுமன்ற உறுப்பினரான அவர் செய்தியாளர்களிடம் இதனைக் கூறினார்.

இதற்கிடையில், சீனா, இந்தியா மற்றும் தாய்லாந்து உட்பட கோவிட் -19 தடுப்பூசியை வெற்றிகரமாக தயாரித்த மற்ற நாடுகளுடன் ‘இருதரப்பு ஒப்பந்தம்’ செய்ய தனது தரப்பு திட்டமிட்டுள்ளதாகவும் டாக்டர் ஆடாம் கூறினார்.

அதே நேரத்தில், அவர் திங்கள்கிழமை, கோலாலம்பூரில் உள்ள, ‘ஃபில் அண்ட் ஃபினிஷ்’ (fill and finish) கேன்சினோ தடுப்பூசி தொழிற்சாலைக்குச் செல்ல உள்ளதாகவும் அவர் சொன்னார்.

“இந்த ‘ஃபில் அண்ட் ஃபினிஷ்’ தொழிற்சாலை உருவாக்கம், நாம் தடுப்பூசியை உற்பத்தி செய்ய முடியும் என்பதற்கான ஆரம்ப அறிகுறிகளில் ஒன்று.

“நாம் தயாரிக்கும் தடுப்பூசியை அடைக்க பாட்டில்கள் செய்யப்பட வேண்டும், எனவே இந்த ‘ஃபில் அண்ட் ஃபினிஷ்‘ தொழில்நுட்பம் ஏற்கனவே உள்ளது, ஆனால் அதை தேசிய மருந்து ஒழுங்குமுறை பிரிவு (என்.பி.ஆர்.ஏ.) மதிப்பீடு செய்ய வேண்டும்,” என்று அவர் கூறினார்.