‘பாதுகாவலர் தாக்குதல் வழக்கை, கொலை வழக்காக வகைப்படுத்துக’ – குலா வலியுறுத்து

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட எட்டு மாதங்களுக்குப் பிறகு, பாதிக்கப்பட்ட பாதுகாவலர், ஆகஸ்ட் 28-ம் தேதி மரணமடைந்ததைத் தொடர்ந்து, பாதுகாவலரைத் தாக்கியவர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட வேண்டுமென டிஏ.பி. நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார்.

இன்று, ஓர் அறிக்கையில், ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம் குலசேகரன், கடுமையான உடல் உபாதைகளை ஏற்படுத்தியக் காரணமாகக் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 335-இன் கீழ், ஜனவரி மாதம் குற்றம் சாட்டப்பட்ட நூர் அஸார் முஹம்மது மீது முழுமையான விசாரணை நடத்துமாறு காவல்துறையை வலியுறுத்தினார்.

“டிசம்பர் 29, 2020-ல், தவ சகாயம், 64, ஈப்போ, ஜாலான் யாங் கல்சோமில், ஓர் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் விருந்தினரால் தாக்கப்பட்டதில் கடுமையாகக் காயமடைந்தார். மூடிய நீச்சல் குளத்தைப் பயன்படுத்த, அவரது மகனுக்குத் தடை விதித்ததால், கோபமடைந்த விருந்தினர் தவ சகாயத்தைத் தாக்கியதாகத் தெரிகிறது.

“இறந்தவர் காயங்கள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஏழு மாதங்களுக்கும் மேலாக சுயநினைவு திரும்பாமாலேயே இறந்து போனார்,” என்று குலசேகரன் ஓர் அறிக்கையில் கூறினார்.

நூர் அஸார் பற்றிய தகவல்கள் சமூக ஊடகங்களில் பரவியது, அவர் கோத்தா பாரு பெர்சத்து, இளைஞர் பிரிவைச் சேர்ந்தவர் என்பதைக் காட்டுகிறது. பேராக் காவல்துறையினர் இந்த வழக்கில் முன்பு அவர் குற்றம் சாட்டப்பட்டதை உறுதிப்படுத்தினர்.

அரசு துணை வழக்கறிஞரை, இந்த வழக்கை ஒரு கொலை வழக்காக வகைப்படுத்தி, ஒரு முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று குலசேகரன் வலியுறுத்தினார்.

“தாக்குதல் நடத்தியவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். தற்போது நிலைமை மாறி, மரணம் நேர்ந்துள்ளதால், நீதிமன்றத்தில் முந்தைய வழக்கை வாபஸ் பெற வேண்டும், தாக்குதல் நடத்தியவர் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட வேண்டும்.

“இந்த வழக்கு பெரிய தார்மீக பிரச்சினைகள், நிறுவப்பட்ட விதிகள் மற்றும் நடைமுறைகளுக்கு இணங்காதது மற்றும் தனது தேவைகள் பூர்த்தி செய்யப்படாதபோது பலவீனமானவர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடும் போக்கு ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது,” என்று குலசேகரன் கூறினார்.

“வன்முறை நம்மைச் சுற்றி உள்ளது. ஓர் அப்பாவியின் மரணத்திற்கு வழிவகுத்த சம்பவத்தை நாம் கண்டிப்பாக கண்டிக்க வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.

நேற்று ஓர் அறிக்கையில், பாதிக்கப்பட்டவர் நேற்று அவரது வீட்டில் இறந்ததை உறுதி செய்த பேராக் காவல்துறைத் தலைவர் மியோர் ஃபரிடல்த்ராஷ் வாஹிட்,  இராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையில் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனை முடிவில், நுரையீரலில் (செப்சிஸ்) பாக்டீரியா தொற்று காரணமாக இறப்பு நேர்ந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.

“இந்தப் புதிய வளர்ச்சியின் அடிப்படையில், வழக்கு குறித்த விசாரணை அறிக்கையை மேலதிக அறிவுறுத்தல்களுக்காக, பேராக் அரசு துணை வழக்கறிஞர் அலுவலகத்திற்கு காவல்துறை அனுப்பும்,” என்று கூறிய அவர், இந்த வழக்கை ஊகிக்க வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

மூடப்பட்ட சர்க்யூட் கேமராக்களால் பதிவுசெய்யப்பட்டு, சமீபத்தில் பரவலான இந்தச் சம்பவம் டிசம்பர் 29, 2020 அன்று நடந்தது என்றும், குற்றவியல் சட்டம் பிரிவு 326-இன் கீழ் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் மியோர் மேலும் கூறினார்.

நூர் அஸார் மீது, ஜனவரி 6-ஆம் தேதி குற்றவியல் சட்டம் பிரிவு 335-இன் கீழ், ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது, மேலும் தண்டனைக்காக செப்டம்பர் 9-ம் தேதி வழக்கு மீண்டும் அட்டவணையிடப்பட்டுள்ளது.