பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் இன்று தனது அமைச்சரவையின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க முடியவில்லை.
கோவிட் -19 நேர்மறை நேர்வுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இஸ்மாயில் இன்று முதல் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டும் என்று பிரதமர் அலுவலகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பதவியேற்பு விழாவைத் தவிர, இஸ்மாயிலால் நாளை புத்ராஜெயாவில் நடைபெறவிருக்கும் 2021 தேசியத் தின விழாவிலும் பங்கேற்க முடியாது, மேலும் இயங்கலை மூலம் மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்க முடியும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இஸ்மாயில் தவிர, கல்வி துணை அமைச்சராகப் பெயரிடப்பட்ட கிமானிஸ் நாடாளுமன்ற உறுப்பினர் முகமது அலமின், நோய்த்தொற்றுக்குச் சாதகமானவர் என்று உறுதிசெய்ததைத் தொடர்ந்து, அவரும் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை.
இதற்கிடையில், கோலாலம்பூரில் உள்ள இஸ்தானா நெகாராவில், அமைச்சர்கள் மற்றும் துணையமைச்சர்கள் பதவியேற்பு விழா இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கியது.
முன்னாள் பிரதமர் முஹைதீன் யாசினும் வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இஸ்மாயில், கடந்த வெள்ளிக்கிழமை அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்களின் பட்டியலை அறிவித்தார் – அதில் 31 அமைச்சர்கள் மற்றும் 38 துணை அமைச்சர்கள் அடங்குவர்.
தேசியக் கூட்டணி அமைச்சரவையின் “மறுசுழற்சி” பதிப்பு இது என சிலர் அறிவித்துள்ளனர், அதைத் தொடர்ந்து பெரும்பாலான அமைச்சர்கள் தக்கவைக்கப்பட்டனர் அல்லது இலாகாக்கள் மாற்றப்பட்டனர்.