கிள்ளான் பள்ளத்தாக்குக்கு வெளியே, கோவிட் -19 நேர்வுகள் அதிகரித்திருப்பதால், பல்வேறு மாநிலச் சுகாதாரத் துறைகள் தங்கள் திறனை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது, ஆனால் அதற்கான நிதி போதியதாக இல்லை என்று பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் சோங் எங் கூறினார்.
எனவே, கைரி ஜமாலுடின் சுகாதார அமைச்சரானவுடன் செய்ய வேண்டிய முக்கிய விஷயங்களில் ஒன்று, மாநிலச் சுகாதாரத் துறை நேர்மறை நேர்வுகளைச் சமாளிக்கும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று சோங் கூறினார்.
கைரி இன்று அரண்மனையில் சுகாதார அமைச்சராகப் பதவியேற்க உள்ளார். செலவினங்களுக்கான ஒப்புதலில் அமைச்சர் கையொப்பமிடப்பட வேண்டும்.
கிள்ளான் பள்ளத்தாக்கில் தொற்றுகள் நிலையானதாகக் காணப்பட்டாலும், பினாங்கு, சபா, சரவாக், ஜொகூர், கெடா, கிளந்தான் மற்றும் பேராக் ஆகிய மாநிலங்கள் இப்போது நேர்வுகளின் அதிகரிப்பைக் கண்டுள்ளன.
ஒரு நாளைக்கு 600 கோவிட் -19 நேர்வுகளைச் சமாளிக்கும் திறன் கொண்ட செப்ராங் பிறை தெங்கா சுகாதார அலுவலகத்தைச் சோங் ஓர் உதாரணமாகக் கொடுத்தார், தற்போது அங்கு ஒரு நாளைக்கு 800 வரையில் புதிய நோயாளிகள் வருகின்றனர்.
~ஒரு நோயாளிக்கு மூன்று நெருங்கியத் தொடர்புகள் இருந்தால், மொத்தம் 2,400 பேர் திரையிடல் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
“சுகாதார அமைச்சின் ஆதரவு இல்லாமலேயே, இந்தச் சூழ்நிலையைச் சமாளிக்க மாவட்டச் சுகாதார அலுவலகம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறது.
“சோதனைகளுக்காக அதிக வசதிகள் மற்றும் குறைந்த ஆபத்துள்ள தனிமைப்படுத்தல் மையங்கள் தேவை, ஆனால் அதற்குப் பணம் செலவழிக்க வேண்டும் என்று அர்த்தம் – அதிக நிதி தேவை.
“நேர்மறை நேர்வுகளின் அதிகரிப்பைச் சமாளிக்க உதவுமாறும் மாநிலச் சுகாதாரத் துறையின் கோரிக்கைகளில் கவனம் செலுத்துமாறு நான் கைரியைக் கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்.
நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையின் ஆரம்பக் கட்டங்களில், அனைத்து கோவிட் -19 நேர்வுகளும் மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்துதல் மையங்களுக்கு அனுப்பப்பட்டன; அனைத்து நெருங்கியத் தொடர்புகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று சோங் குறிப்பிட்டார்.
“இப்போது, நேர்மறையானவர்கள் வீட்டிலேயேத் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், மருத்துவமனைகள் அல்லது தனிமைப்படுத்துதல் மையங்களுக்கு அனுப்பப்படுவதில்லை.
“முழு திறனுடன் அல்லது திறனுக்கு அப்பாற்பட்டு மருத்துவமனைகள் செயல்படுகின்றன என்பதை இதன் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது. இதுவும் ஒரு சமரசம்தான், ஏனெனில் மருத்துவமனையில் நோயாளிகளின் நெரிசலை குறைக்க இது உதவும்,” என்று டிஏபி பிரதிநிதியான அவர் கூறினார்.
இருப்பினும், தனிமைப்படுத்தலுக்கு ஏற்ற வீடுகளில் அனைவரும் வாழ்வதில்லை என்று அவர் கூறினார்.
“எனவே, குறைந்த ஆபத்துள்ள நோயாளிகளுக்கு மேலும் தனிமைப்படுத்துதல் மையங்களை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.