பொதுப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் இயக்கம் ஒன்று, தேசியக் கூட்டணி (தே.கூ.) நிர்வாகத்தில், பதவியில் இருந்தபோது தோல்வியைக் கோடிட்டுக் காட்டிய உயர்க்கல்வி அமைச்சர் நொரைய்னி அகமது மீண்டும் நியமிக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினர்.
மலாயா பல்கலைக்கழக மாணவர் சங்கம் (கே.எம்.யு.எம்.) 2021, பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் நோரைய்னியை மீண்டும் நியமித்த நடவடிக்கை, நாட்டின் மீட்புக்காக இளைஞர்களை அதிகளவில் ஈடுபடுத்தும் நோக்குடன் ஒத்துப்போகவில்லை என்றும் அது முரண்பாடான “நகர்வு” என்றும் கூறியது.
“ஆகஸ்ட் 27-ஆம் தேதி, டாக்டர் நொரைய்னியின் மறு நியமனம்… அவர் உயர்க்கல்வி அமைச்சராக இருந்த காலத்தில், பல்வேறு பிரச்சனைகளும் தோல்விகளும் உருவான உயர்க்கல்வி நிறுவனத்தை நிர்வகிப்பதற்கு, ஒரு முரண்பாடான நடவடிக்கை என்று கூறலாம்.
“முந்தைய அரசாங்கத்தின் போது தனது கடமைகளை நிறைவேற்றுவதில் தோல்வியடைந்ததன் மூலம், அவர் இந்தப் பதவியை வகிக்க தகுதியற்றவர் என்பதை நிரூபித்துள்ளார்; எனவே, ஓர் உயர்க்கல்வி அமைச்சராக தனது பொறுப்புகளை அவரால் திறம்பட நிறைவேற்ற முடியாது,” என்று அவர்கள் இன்று ஓர் அறிக்கையில் கூறியுள்ளனர்.
மாணவர் இயக்கம் எழுப்பியத் தோல்விகளில், புதிய மாணவர்களின் பதிவு கடைசி நிமிடத்தில் ஒத்திவைக்கப்பட்டதும் அடங்கும். கடந்த ஆண்டு, அக்டோபரில் நேர்முகப் பதிவு நாளுக்கு ஒரு நாள் முன்பாக பதிவு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது, கே.எம்.யு.ம்.-இன் கூற்றுப்படி இது மாணவர்களுக்குப் பல பிரச்சனைகளை ஏற்படுத்தியது.
ஒத்திவைக்கப்பட்டதன் விளைவாக, கல்லூரியில் தங்க முடியாத பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள், அவரவர் வீடுகளுக்குத் திரும்புவதற்கானச் செலவை ஏற்க வேண்டியிருந்தது.
சபா மற்றும் சரவாக் மாணவர்கள், ஆர்.தி.-பி.சி.ஆர் (RT-PCR) தேர்வுக்கான செலவைத் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பச் செலுத்த வேண்டியிருந்தது என்று கூறிய கே.எம்.யு.ம்., அதே நேரத்தில் கே.எம்.யு.ம். விண்ணப்பித்த தேர்வுக்கானக் கட்டணத்தை உயர்க்கல்வி அமைச்சு (கே.பி.தி.) இன்னும் தீர்க்கவில்லை என்றது.
அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்கலைக்கழகக் கல்லூரிகள் சட்டம் 1971-ஐ (Auku), இரத்து செய்வதற்கான முயற்சிகளைத் திரட்ட அரசாங்கம் தவறியது என்ற கே.எம்.யு.ம்., இது “மாணவர்களிடையே விமர்சன மற்றும் ஜனநாயகச் சிந்தனையை வளர்ப்பதில்” அரசுக்கு ஆர்வம் இல்லை என்பதைக் காட்டுகிறது என்றும் கூறியுள்ளது.
எனவே, உயர்க்கல்வி அமைச்சரின் புதிய நியமனம் உண்மையிலேயேத் தொலைநோக்கு பார்வை கொண்ட மற்றும் மாணவர்களின் நலன்களுக்குச் சேவை செய்யத் தயாராக உள்ளவர்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று கே.எம்.யு.ம். வலியுறுத்துகிறது.
முன்னாள் எரிசக்தி மற்றும் இயற்கை வளத்துறை அமைச்சர் ஷம்சுல் அனுவார் நசாராவுடன், முன்னாள் பிரதமர் முஹைதீன் யாசினின் நிர்வாகத்திற்கான ஆதரவைத் திரும்பப் பெறும் நோக்கில், நோரைய்னி தனது பதவியை இராஜினாமா செய்தார்.
இருப்பினும், அம்னோவைச் சார்ந்த மற்ற அமைச்சர்களுடன், இஸ்மாயிலால் அவர் மீண்டும் அமைச்சரவையில் நியமிக்கப்பட்டார்.