‘பள்ளிகளைத் திறப்பதற்கு முன்னதாக பாதுகாப்பான சூழலை உருவாக்கவும்’ – பேஜ்

கல்விக்கான பெற்றோர் நடவடிக்கை குழுவின் (பேஜ்) தலைவர், நூர் அஸிமா அப்துல் ரஹீம், பள்ளிகள் திறப்பதற்கு முன்பாக பொருத்தமான செந்தர இயங்குதல் நடைமுறைகளை (எஸ்ஓபி) உருவாக்கி, பாதுகாப்பான சூழலை அமல்படுத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.

குழந்தைகள் பள்ளி படிப்பைக் கைவிடாமல் இருக்க, பள்ளிகளைத் திறப்பது மிகவும் முக்கியம் என்றாலும், ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கான தடுப்பூசி திட்டம் துரிதப்படுத்தப்பட வேண்டும்.

“குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்பது எளிதான முடிவு அல்ல, சரியான சூழ்நிலை இன்னும் உருவாகவில்லை.

“பெற்றோர்களும் பள்ளி ஊழியர்களும் சிறந்த முடிவை எடுக்கும் வகையில், உள்ளூர் பகுதிக்கு ஏற்ப நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கையைக் குறிக்கும் துல்லியமான தகவல்களையும் தரவையும் வழங்குவது முக்கியம்.

“இருப்பினும், பள்ளிகள் எப்போதும் திறந்திருக்க வேண்டும் என்று நாங்கள் பரிந்துரைக்கிறோம், பெற்றோர்கள் அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படும்போது தங்கள் குழந்தைகளை அனுப்பலாம்,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

ஆகஸ்ட் 29-ம் தேதி, மூத்த அரசியல்வாதி ரஃபிடா அஜீஸ் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லாமல் பள்ளிகள், எல்லைகள் மற்றும் பொருளாதாரத்தை மீண்டும் திறப்பது குறித்து தனது கவலையை வெளிப்படுத்தினார்.

ஒவ்வொரு பள்ளியிலும் கிருமிநாசினி நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுமா மற்றும் தடுப்பூசிகள் மற்றும் கோவிட் -19 சோதனை மேற்கொள்ளப்பட்டதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார், குறிப்பாக பள்ளியுடன் நேரடி மற்றும் மறைமுகத் தொடர்பு கொண்டவர்களுக்கு, இதில் பள்ளி முதல்வர்கள் முதல் பள்ளி துப்புரவு தொழிலாளர்கள் வரை அடங்குவர்.

இந்த நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்படாத வரை, மாணவர்களுக்குத் தொற்று ஆபத்து ஏற்படாதவாறு பள்ளிகள் மூடப்பட வேண்டும் என்று ரஃபிடா கூறினார்.

அஸிமாவின் கூற்றுப்படி, பள்ளிகளைத் திறக்க வேண்டும், ஏனெனில் இது குழந்தைகள் படிப்பதற்கான இடம் மட்டுமல்ல, சில குழந்தைகள் பள்ளியில் உணவு விநியோகம் சார்ந்து உள்ளனர், மனச்சோர்வுக்கு ஒரு மாற்று இடமும் அவர்களுக்குத் தேவை.

“எனவே, தற்போதுள்ள எஸ்.ஓ.பி.க்களை மேம்படுத்த வேண்டும், மேலும் இறுக்கமாக்க வேண்டும், அதனால் அவை பாதுகாப்பாகவும் ஒழுங்காகவும் நடைமுறைக்கு வரும்.

“மாணவர்கள் சுயசுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழலைப் பராமரிக்க நன்கு பயிற்சி பெற வேண்டும், அது ஒரு நடைமுறையாக மாற வேண்டும், மேலும் அவர்களே அதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு அறிந்திருக்கிறார்கள். பெரியவர்கள் எதிர்பார்ப்பதை விட அவர்களால் அதைச் சிறப்பாக செயல்படுத்த முடிகிறது,” என்று அவர் கூறினார். 

எனவே, பள்ளிகள் திறப்பதற்கு முன்பு சுகாதாரம் மற்றும் துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.

கோவிட் -19 தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் மாணவர்களுக்கு எப்போதும் தனிப்பட்ட சுகாதாரம், உடல் ரீதியான இடைவெளி பராமரிப்பு மற்றும் சுற்றுச்சூழல் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு அளித்தால் நல்லது என்று அஸிமா சொன்னார்.

“பள்ளிகளைத் திறக்கலாம், ஏனென்றால் கற்றல் இழப்பு இளம் குழந்தைகளுக்குக் கோவிட் தொற்றைவிட பெரிய அச்சுறுத்தலாகும்,” என்று அவர் கூறினார்.

தேசியப் புனர்வாழ்வு திட்டத்தின் (பிபிஎன்) இரண்டாம் கட்டம் மற்றும் மூன்றாம் கட்டத்தில் உள்ள மாநிலங்களுக்கானப் பள்ளிகளை மீண்டும் திறக்கும் தேதி அக்டோபர் 3-ஆக நிர்ணயிக்கப்பட்டது, இது முன்னர் அறிவிக்கப்பட்டபடி செப்டம்பர் 1 உடன் ஒப்பிடும்போது தாமதமானது.

கோவிட் -19 நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பள்ளிகள் திறக்கப்படுவதை ஒத்திவைக்குமாறு பலர் அழைப்பு விடுத்த பின்னர் இந்த அறிவிப்பு வந்தது.