சைபுலும் டிபிபி பாரா-வும் திரும்ப அழைக்கப்பட வேண்டும் என பிரதிவாதித் தரப்பு விரும்புகிறது

பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் மீதான குதப்புணர்ச்சி வழக்கில், புகார்தாரரருக்கும் முன்னாள் அரசு தரப்பு வழக்குரைஞர் குழுவைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையிலான காதல் விவகாரம் குறித்து கூறப்படும் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக விசாரணை தள்ளி வைக்கப்பட வேண்டும் என பிரதிவாதித் தரப்புக் கேட்டுக் கொண்டுள்ளது.

முகமட் சைபுல் புஹாரி அஸ்லானுக்கும் டிபிபி பாரா அஸ்லினா லத்தீப்புக்கும் இடையில் காதல் விவகாரம் இல்லை என சட்டத்துறைத் தலைவர் கூறிக் கொண்டுள்ளதை அவர்கள் இருவரும் நிரூபிக்க வேண்டும் என பிரதிவாதித் தரப்புத் தலைமை வழக்குரைஞர் கர்பால் சிங் இன்று நீதிமன்றத்தில் தமது வாதத் தொகுப்பில் கூறினார்.

“அந்த வழக்கில் நியாயமான முடிவு காணப்படுவதற்கு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 245வது பிரிவின் கீழ் சைபுல் மீண்டும் அழைக்கப்பட வேண்டும். பாரா அஸ்லினா நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட வேண்டும்,” என அவர் சொன்னார்.

பிரதிவாதி தரப்பு தனது வாதங்களை முடித்துக் கொண்ட ஒரு மாதத்திற்கு பின்னர் நவம்பர் 11ம் தேதியே, சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் அந்த விவகாரம் பற்றி நடத்திய விசாரணை முடிவுகள் பகிரங்கமாக வெளியிடப்பட்டதால் அது மிகவும் முக்கியமானது என்றும் அவர் சொன்னார்.

“அந்த விவகாரம் வெளியில் தெரியும் வரையில் பாரா அஸ்லினா அரசு தரப்பு வழக்குரைஞர் குழுவில் இருந்தார். அதனால் அவருக்கு விசாரணை அறிக்கைகளை அறிந்திருக்க வேண்டும்.”

“அதன் விளைவாக சைபுல் பிரதிவாதித் தரப்புக்கு சாதகமாக தனது சாட்சியத்தை இட்டுக் கட்டுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டிருக்க  வேண்டும்.”

அந்த விவகாரம் மீது சட்டத் துறைத் தலைவர் அலுவலகம் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள், பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ், நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக வழங்கிய பதில் மூலம்  புக்கிட் குளுகோர் எம்பி-யுமான கர்பாலுக்குத் தெரிய வந்தது.

அந்த வழக்கில் முக்கிய சாட்சியுமான புகார்தாரருடன் பாரா அஸ்லினா காதல் உறவுகளை வைத்துள்ளார் என்னும் குற்றச்சாட்டுக்கள் வெளியானதும் அவர் அரசு தரப்பு வழக்குரைஞர் குழுவிலிருந்து அகற்றப்பட்டார்.

“பிரதமருடைய கருத்து நீதிமன்றத்தை அவமதிப்பதாகும்”

குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளிக் கூண்டிலிருந்து வாக்குமூலம் கொடுக்க முடிவு செய்ததை குறை கூறியதற்காக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மீது நீதிமன்ற அவமதிப்பு குறிப்பிடப்பட வேண்டும் என கூறியதுடன் கர்பால் தமது வாதத் தொகுப்பைத் தொடங்கினார்.

அன்வார் சாட்சியாக இருப்பதில்லை என முடிவு செய்ததால் அவர் குறுக்கு விசாரணை செய்யப்படவில்லை.

அன்வாருடைய தேர்வை அண்மையில் முடிந்த அம்னோ பொதுப் பேரவையில் நஜிப் குறை கூறியிருந்தார்.  “பிரதமருடைய கருத்துக்கள் நீதிமன்றத்தை அவமதிப்பதாகும், அதனால் அவர் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு சுமத்தப்படக் கூடாது என்பதற்கு காரணம் கோரும் நோட்டீசை நீதிமன்றம் அனுப்ப வேண்டும்”, என்றார் கர்பால்.

குற்றவாளிக் கூண்டிலிருந்து கொடுக்கப்பட்ட வாக்குமூலத்தை சாட்சியமாக நீதிமன்றம் ஏற்றுக் கொண்ட வழக்குகளையும் கர்பால் எடுத்துக் காட்டினார்.

“ஆகவே குற்றவாளிக் கூண்டிலிருந்து கொடுக்கப்படும் வாக்குமூலம் சாட்சியமாகும் என்பதால் இந்த நீதிமன்றம், அதனையும் பிரதிவாதித் தரப்பு வழங்கியுள்ள மற்ற ஆதாரங்களையும் பரிசீலிக்க வேண்டும்”, என்றார் அவர்.

குற்றவாளி கூண்டிலிருந்து வழங்கிய சாட்சியத்தில் அன்வார், அந்தக் குற்றச்சாட்டை வன்மையாக மறுத்ததுடன் தமது அரசியல் வாழ்க்கையைச் சீரழிப்பதற்கான சதித் திட்டத்தின் ஒரு பகுதி அது என்றும் கூறிக் கொண்டார்.

அரசு தரப்பு வாதத் தொகுப்பை நீதிபது ஜைனல் அபிடின் முகமட் டியா நாளை செவிமடுப்பார்.