மாரா ஜூனியர் அறிவியல் கல்லூரியில் (எம்ஆர்எஸ்எம்), தேசிய இடைநிலைப் பள்ளி மற்றும் தேசியப் பள்ளி மாணவர்களை மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும் என்ற புதிய நிபந்தனைக்குப் பல எதிர்க்கட்சித் தலைவர்கள் குரல் கொடுத்துள்ளனர்.
2022 மாணவர் சேர்க்கைக்கான எம்.ஆர்.எஸ்.எம்.-இன் அதிகாரப்பூர்வ வலைத்தளம், மற்றவற்றுடன், படிவம் ஒன்று மற்றும் நான்கிற்கான சேர்க்கை, தேசியப் பள்ளிகள் மற்றும் தேசிய இடைநிலைப் பள்ளிகளின் விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே என்று கூறுகிறது.
இதன் பொருள், இது தேசிய வகை தொடக்க / இடைநிலைப் பள்ளிகள், அரசு உதவி பெறும் மதப் பள்ளிகள் மற்றும் தேசிய மத இடைநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களை மாரா ஏற்காது.
முன்பு, எம்.ஆர்.எஸ்.எம்.-க்கான நுழைவு நிபந்தனைகளில், விண்ணப்பதாரர் மலேசிய குடிமகனாக இருக்க வேண்டும். தீபகற்ப மலேசியா, சபா மற்றும் சரவாக் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் இது திறந்திருக்கும் என்றிருந்தது.
கூலாய் எம்பி தியோ நீ சிங் மற்றும் சுங்கை பூலோ எம்பி ஆர் சிவராசா இருவரும், கூட்டுக் அறிக்கையில், 2002-ஆம் ஆண்டிலிருந்து பூமிபுத்ரா அல்லாதவர்களுக்கு 10 விழுக்காடு ஒதுக்கீடு ஏற்படுத்தப்பட்டுள்ளதால், இந்தக் கொள்கையை மறுபரிசீலனை செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினர்.
“அது தவிர, பூமிபுத்ரா அல்லாதவர்களுக்கு எம்.ஆர்.எஸ்.எம். ஒதுக்கீடு 10 விழுக்காடு வழங்கப்பட்டிருந்தாலும், 2018-க்கு முன்பு பூமிபுத்ரா அல்லாத மாணவர்களில் 1 அல்லது 2 விழுக்காட்டினர் மட்டுமே 10 விழுக்காடு ஒதுக்கீட்டை நிரப்புகிறார்கள் என்பதை மக்கள் அறிந்திருப்பது முக்கியம்.
“எனவே, இந்தக் குழுவினர் எம்.ஆர்.எஸ்.எம்.-இல் கல்வி பெறுவதை ஏன் தடுக்க வேண்டும்?” என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.
அவர்களின் கருத்துப்படி, பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் உச்சரித்த “மலேசியக் குடும்பம்” என்ற சொற்றொடர், இந்தப் புதிய கொள்கை தொடர்ந்தால் பயனற்றதாக ஆகிவிடும்.
இதற்கிடையில், பிகேஆர் மகளிர் உச்சமன்ற உறுப்பினர் சிவமலர் கணபதி, புதிய நுழைவு நிபந்தனைகளை இரத்து செய்யுமாறு கிராமப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் மஹ்ட்சீர் காலிட் மற்றும் மஜ்லிஸ் அமானா ரக்யாட் (மாரா)-இன் உயர் நிர்வாகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பூமிபுத்ரா அல்லாத மாணவர்களைத் தேசியப் பள்ளிகளுக்குச் செல்ல ஊக்குவிப்பதற்கான கொள்கையை, இந்த நடவடிக்கை பாதிக்கும் என்றார் அவர்.
“இது பல்லின மலேசியாவைக் கொண்டாடும் கூட்டாட்சி அரசியலமைப்பின் உணர்வுக்கு முற்றிலும் முரணானது. எம்.ஆர்.எஸ்.எம்.-க்குள் நுழைவதற்கான உரிமையை மறுப்பது அரசாங்கம் காட்டும் அப்பட்டமான பாகுபாடு ஆகும்.
“எம்.ஆர்.எஸ்.எம். ஏற்கனவே அதன் சொந்த திரையிடல் ஸ்கிரீனிங் பொறிமுறையை, அதாவது, எம்.ஆர்.எஸ்.எம். சேர்க்கை முன்கணிப்பு சோதனையைக் (Ujian Kecenderungan Kemasukan MRSM -யு.கே.கே.எம்) கொண்டுள்ளது. எனவே, அறிமுகப்படுத்தப்பட்ட சமீபத்திய புதிய அளவுகோல்கள் பகுத்தறிவற்றதாக உள்ளன. ஏனெனில், திரையிடல் சோதலையில் வெற்றி பெற்ற மாணவர்கள் மட்டுமே தகுதி அடிப்படையில் (எம்ஆர்எஸ்எம்) நுழைய முடியும்,” என்று அவர் சொன்னார்.