முஹைதீன் தேசியப் புனர்வாழ்வு மன்றத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார் – கேஎஸ்என்

முன்னாள் பிரதமர் முஹைதீன் யாசின், அமைச்சர் அந்தஸ்தில், தேசிய புனர்வாழ்வு மன்றத்தின் (பிபிஎன்) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அமைச்சரவை செயலாளராக இருக்கும் அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் முகமட் ஸூகி அலி கூறினார்.

செப்டம்பர் 1, 2021, நடந்த அமைச்சரவை கூட்டத்தில், முன்னாள் 8-வது பிரதமராக இருந்த முஹைதீன் யாசின், பிபிஎன்-இன் தலைவராக நியமிக்க ஒப்புக்கொள்ளப்பட்டது.

“இந்த நியமனம் யாங் டி-பெர்த்துவான் அகோங்கிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

“சிறந்த பொருளாதாரத் தாக்கத்தை அடைவதற்கும், கோவிட் -19 தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கும், நாட்டின் மீட்புநிலை திட்டங்களை வழிநடத்தவும் முஹைதீன் யாசினின் திறனில் அரசாங்கம் வைத்துள்ள நம்பிக்கையின் அடிப்படையில் இந்த நியமனம் வழங்கப்பட்டது,” என்று நேற்று ஓர் அறிக்கையில் அவர் கூறினார்.

முன்னதாக, முஹைதீன் பிரதமர் பதவியை இராஜினாமா செய்த பிறகு, மூத்த வழிகாட்டி அமைச்சராக நியமிக்கப்படுவார் என்று வதந்திகள் வந்தன.

அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் முகாம், தேசியக் கூட்டணி (தே.கூ.) அரசாங்கத்திற்கான ஆதரவைத் திரும்பப் பெற்றதால் பெரும்பான்மையை இழந்த முஹைதீன் வெளியேற்றப்பட்டார்.

முஹைதீன் கோவிட் -19 தொற்றுநோயைச் சமாளிக்க தவறிவிட்டதை வலியுறுத்தி, ஜாஹித் வெளிப்படையாக இந்த நடவடிக்கையைத் தற்காத்து பேசினார்.

முஹைதீன் பிரதமராக இருந்த காலத்தில், பிபிஎன்-ஐ அறிமுகப்படுத்தினார், இது மூன்று முக்கிய அளவுகோல்களின் – தினசரி நேர்வுகளின் எண்ணிக்கை, மருத்துவமனை திறன் மற்றும் தடுப்பூசி விகிதங்கள் – அடிப்படையில் கோவிட் -19 நிலைமைகள் மேம்பட்டால் படிப்படியாக சமூகப் பொருளாதாரத் துறைகளை மீண்டும் திறக்கும் நோக்கம் கொண்டது.

முன்னதாக, பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் பிபிஎன்.இன் ஒரு பகுதியாக இருக்க எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தார்.

பக்காத்தான் ஹராப்பான் இந்த விஷயத்தில் இன்னும் ஒரு முடிவை எடுக்கவில்லை, ஆனால் தனிப்பட்ட தலைவர்கள் இந்தத் திட்டத்தில் ‘ஆமாம் சாமி’ நிலை இல்லையென்றால், அதில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர்.