தவா மரண வழக்கு : பேராக் காவல்துறைத் தலைவர் தவறாக வழிநடத்துகிறார் – வழக்கறிஞர்கள்

பேராக் காவல்துறைத் தலைவர், மியோர் ஃபரிதலத்ராஷ் வாஹித், எஸ் தவசகாயத்தின் மரணத்தில் சந்தேக நபரை ஏன் காவல்துறையால் மீண்டும் கைது செய்ய முடியவில்லை என்பதை விளக்குவதில், ஃபெடரல் அரசியலமைப்பின் பிரிவு 7 (2)-ஐ மேற்கோள் காட்டும் போது, ​​தவறான வழிநடத்தினார் என்று குற்றம் சுமத்தப்பட்டார்.

மேலும் கடுமையான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் மியோர் தெரிவித்தார்.

அப்படியிருந்தும், குற்றம் சாட்டப்பட்டவர் விடுவிக்கப்பட்டால் அல்லது தண்டனை வழங்கப்பட்டால் மட்டுமே, பிரிவு 7 (2) பொருந்தும்; இல்லையேல், அதே குற்றத்திற்காக அவர் மீது மீண்டும் வழக்குத் தொடர முடியாது என்று நான்கு வழக்கறிஞர்கள் கருதுகின்றனர்.

“மியரின் கருத்து நியாயமற்றது, சட்டத்தின்படி தவறானது, தவறான திசைக்கு வழிகாட்டுவதற்கு ஒப்பானது,” என்று வழக்கறிஞர்கள் கூறினர்.

அந்த நான்கு வழக்கறிஞர்களும் எம் குலசேகரன், ஏ சிவநேசன், உமர் குட்டி மற்றும் செல்வம் நடராஜா ஆவர். குலசேகரன் ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினராகவும், சிவநேசன் சுங்கை சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளனர்.

சந்தேகத்திற்குரியவர் – நூர் அஸார் முஹம்மது – உடல் ரீதியாக கடுமையான தீங்கு விளைவித்ததற்காக ஜனவரி மாதம் குற்றம் சாட்டப்பட்டார், அந்த வழக்கு இன்னும் தீர்க்கப்படவில்லை.

கொலைக்கான குற்றவியல் சட்டம் பிரிவு 302-இன் கீழ், காவல்துறையினர் விசாரிக்கிறார்கள் என்றால், நூர் அஸார் சட்டரீதியாக ஜாமீனில் வெளிவர அனுமதிக்கப்பட முடியாது என்று நான்கு வழக்கறிஞர்களும் கருதுகின்றனர்.

நூர் அஸார் மீது ஜாமீனில் வெளிவரக்கூடிய குற்றம் சுமத்தப்பட்டதால், சந்தேக நபர் விசாரணையில் இருந்து தப்பிக்கும் ஆபத்து இருப்பதாக அவர்கள் எச்சரித்தனர்.

இது தொடர்பாக, நான்கு வழக்கறிஞர்களும், நூர் அஸார் மீதான கொலைக் குற்றச்சாட்டை விரைவுபடுத்துமாறு சட்டத்துறை தலைவரை வலியுறுத்தினர்.

பாதுகாவலர் தவசகாயம், கடந்த ஆண்டு டிசம்பர் 29 -ம் தேதி பணியில் இருந்தபோது தாக்கப்பட்டார்.

எட்டு மாத கால சிகிச்சை பலனின்றி, நினைவு திரும்பாமாலேயே ஆகஸ்ட் 28-ம் தேதி இறந்தார்.

பிரிவு 7 (2)-ஐ மேற்கோள் காட்டியதைத் தவிர, நூர் அஸார் மீது அதிக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என்று நம்புவதாகவும், சட்டத்துறை தலைவர் விரைவில் ஓர் உத்தரவை வெளியிடுவார் என்றும் நம்புவதாக, நேற்று மியோர் கூறினார்.

“குற்றம் சாட்டப்பட்டவர், செப்டம்பர் 9-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதேசமயம் அவர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

“அரசு துணை வழக்கறிஞரின் பதிலுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்,” என்று அந்த மாநிலக் காவல்துறை தலைவர் கூறினார்.