தேசியப் புனர்வாழ்வு மன்றத்தின் (எம்.பி.என்.) தலைவராக, முன்னாள் பிரதமர் முஹைதீன் யாசின் நியமிக்கப்பட்டது குறித்து, பிகேஆர் தலைமைச் செயலாளர் சைஃபுதீன் நசுதியோன் இஸ்மாயில் கேள்வி எழுப்பினார்.
இந்த நியமனம், நாட்டின் மீட்பு முயற்சிகளுக்குத் தேவையற்ற அதிகாரத்துவத்தைச் சேர்க்கிறது என்று அவர் கூறினார்.
“ஏனெனில், முஹைதீன் இன்னும் எம்.பி.என்.-இன் பரிந்துரையை முதலில் அமைச்சரவையில் முன்வைக்க வேண்டும்.
“இஸ்மாயிலுக்குத் தனது அமைச்சர்கள் மீது நம்பிக்கை இல்லையா?” என்று சைஃபுதீன் ஓர் அறிக்கையில் கேள்வி எழுப்பினார்.
இந்த நடவடிக்கை இஸ்மாயில் சப்ரியின் அரசியல் பிழைப்பை உறுதி செய்வதை மட்டுமே நோக்கமாகக் கொண்டதா என்றும் அவர் கேட்டார்.
முஹைதீனின் புதிய பதவி ஓர் அமைச்சர் அந்தஸ்து கொண்டது.
பிரதமராக இருந்த போது முஹைதீனின் கொள்கை திட்டங்கள், தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் தெளிவாகத் தவறிவிட்டது என்றும், இப்போது மக்களின் துன்பங்களுக்கு அவர்தான் பொறுப்பு என்றும் சைஃபுதீன் கூறினார்.
“முஹைதீன் பிரதமராக இருந்த காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட, பயனற்ற தொற்றுநோய் மேலாண்மை கொள்கையை இரத்து செய்ய அல்லது மேம்படுத்த முஹைதீன் இஸ்மாயில் சப்ரிக்கு எந்த அளவிற்குப் பரிந்துரை செய்ய தயாராக இருக்கிறார்?
“முன்னாள் பிரதமர் தனது பாரம்பரியத்தைப் பாதுகாக்க முயற்சிக்கிறார், அதை அவர் புறநிலையாக மதிப்பீடு செய்ய மாட்டாரா?” என்றும் சைஃபுதீன் கேட்டார்.
அரசாங்கத்தின் தலைமையிலிருந்த காலத்தில், முஹைதீன் தேசிய மீட்புத் திட்டத்தை (பிபிஎன்) அறிமுகப்படுத்தினார் – இது தினசரி வழக்குகளின் எண்ணிக்கை, மருத்துவமனை திறன் மற்றும் தடுப்பூசி விகிதங்களின் அடிப்படையில் தொற்றுநோய் நிலைமைகள் மேம்படுவதால் படிப்படியாக அனைத்து துறைகளையும் மீண்டும் திறக்கும் நோக்கம் கொண்டது.