பிரதமர் இஸ்மாயில் சப்ரியை நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்படத் தேவையில்லை என்று இட்ருஸ் ஹருன் கூறியிருப்பது வியப்பாக இருக்கிறது.
அவரின் கூற்றுப்படி பிரதமர் இஸ்மாயில் சப்ரி அரசியலமைப்புச் சட்டப்படி நிமியக்கப் பட்டிருக்கிறார். அப்படி அவர் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு உட்படுத்தப்படுவாரேயானால் அது பேரரசரின் அதிகாரத்தை அவமதிப்பதாக கருதப்படும் என்று அவர் கூறியிருக்கின்றார்.
பேரரசரைத் தவிர்த்து வேறு யாரேனும் பிரதமரின் பதவியை மறு உறுதிசெய்ய வேண்டுமென்ற நிலைமை ஏற்பட்டால் அது பேரரசரின் தனிப்பட்ட அதிகாரத்தைப் பிறரால் தடுத்த நிறுத்த முடியும் என்று அர்த்தப்படுத்தப்படும் என்று மேலும் அவர் கூறியிருக்கிறார்.
மாமன்னர் தன்னுடைய ஆகஸ்டு 18ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் புதிய பிரதமராகப் பதவி ஏற்கும் ஒருவர் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவில் நாடாளுமன்றத்தில் அவரின் ஆதரவை நிரூபிக்க வேண்டுமென ஆணையிட்டிருந்தார் . இது அரசியலமைப்பு சட்டம் சரத் 40(2)(a), 43(2) (a) பிரிவினை பூர்த்தி செய்ய அவசியமாகிறது என்றும் அதில் குறிப்பிடப்பிட்டிருந்தார்.
இப்பொழுது யார் அரசர் ஆணையை அவமதித்தாக கருதப்படும் ?
ஆகவே தலைமை சட்ட அதிகாரியின் கருத்து ஒரு வேண்டுகோள் மட்டுமே தவிர அது சட்ட அடிப்படையிலானது அல்ல. அவர் அறிக்கைவழி ஒன்று புலனாகிறது, அதாவது இஸ்மாயில் சப்ரியின் அரசு ஒரு வலுவில்லாத அல்லது மஹியாடின் அரசைவிட அதிக ஆட்டம் காணக்கூடிய அரசு என்று.
இதே போன்ற நம்பிக்கை வாக்கெடுப்பு வழி முன்னாள் பிரதமர்களான ஹுசேன் ஓன் , படாவி இருவரும் தங்களுடைய பதவியைப் பதவியேற்ற சில நாட்களிலேயே நாடாளுமன்றத்தில் உறுதி செய்து கொண்டனர். ஹுசேன் ஓன் பதவியேற்ற 11 நாட்களிலும் , துன் படாவி 3 நாட்களிலும், நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி வெற்றிகண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போதியா பிரதமர் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளக் கொள்ள தயங்குவது முன்னாள் பிரதமர் மஹியாடினைப் போன்று தனக்கும் பெரும்பான்மை ஆதரவு கிடக்காது என்ற ஒரு பயத்தினாலா என்ற வினா எழுகிறது.
இதே அடிப்படையில்தான், இஸ்மாயில் சப்ரி இந்த நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி நாட்டின் அரசியல் நிலைத்தன்மையை உறுதிசெய்ய வேண்டும். ஒரு அரசு நிலையாக இல்லையென்றால் அதனால் வெளிநாட்டு மூலதனங்களை நம் நாட்டிற்கு ஈர்க்க முடியாது. வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் தொழிற்துறை மூத்த அமைச்சர் டத்தொ ஸ்ரீ அஸ்மின் அலியின் தலைமையில் நாம் 50% மேலான வெளி நாட்டு நேரடி மூலதனங்களை இழந்துள்ளோம் என்பதை இங்கு நினைவு கூற விரும்புகிறேன்.
இதனை நாம் தொடர்ந்து அனுமதிக்கக் கூடாது. பிரதமரைக் குறைந்த பட்சம் 111 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்பது நிரூபிக்கப்பட வேண்டும். அப்படி இல்லையென்றால் மீண்டும் ஒரு அரசியல் போராட்டம் ஏற்பட்டு இன்னொரு அரசியல் மாற்றம் ஏற்படுவதற்கு இது வழி வகுத்து விடும்.
இந்த கோவிட் காலத்தில் ஏற்பட்டுள்ள பல பிரச்சனைகளைச் சமாளிக்கக்கூடிய ஒரு உறுதியான அரசு யந்திரத்தையே மாமன்னர் விரும்புகிறர். கோவிட் 19 பரவலை முறையாக கையாளத்தெரியாத முஹியாடின் அரசு போன்று இதுவும் இருக்கக் கூடாது என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார்.
ஜனநாயக நாடாளுமன்ற முறையின்வழி (வெஸ்ட் மினிஸ்டெர் ) ஏற்கனவே இவற்றிற்கு முன் உதாரணங்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ளபடியால், இட்ருஸ் தன்னுடைய கருத்தை திரும்பப் பெற்று, தேவைற்றவகையில் இஸ்மாயில் சப்ரி அரசுக்கு ஆதரவாகச் செயல்படுவது போன்ற வாதத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
மு.குலசேகரன், ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர்