கே.ஜே. : எஸ்.ஓ.பி.-களுக்கான பொது வழிகாட்டிகள்

கோவிட் -19 தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான தற்போதைய செந்தர இயங்குதல் நடைமுறைகள் (எஸ்.ஓ.பி.) சிக்கலானவை, மற்றும் புரிந்துகொள்வதற்குக் கடினமான என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் கூறினார்.

சமீபத்தில் ஒரு சிறப்பு ஊடக நேர்காணலில் பேசிய கைரி, இதனால்தான் பல அமைச்சர்களுடன் சேர்ந்து தானும், தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் “மலை போன்ற பட்டியலை” சமன் செய்ய முயல்வதாக அவர் கூறினார்.

“குறிப்பிட்ட சில துறைகளை அடிப்படையாகக் கொண்ட பல எஸ்.ஓ.பி.-க்கள் உள்ளன, நாம் அவற்றைப் போதுமான அளவு பொதுமைபடுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன், இதன் மூலம் அதனை அனைத்து துறைகளுக்கும் பயன்படுத்தப்படலாம்.

“நாம் பொதுமக்களுக்குத் தெளிவாக வழங்க வேண்டும்.

“இப்போது மக்கள் எஸ்.ஓ.பி. பட்டியல்களைத் தேடி, கண்டுபிடிக்க நிறைய நேரம் செலவிட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் அதைத் தவிர்க்க விரும்புகிறோம். தெளிவான எஸ்.ஓ.பி. -களின் ஒரு சிறிய பட்டியல், தேசியப் புனர்வாழ்வு திட்டத்தின் (பி.பி.என்.) வெவ்வேறு நிலைகளுக்கு,” என்று அவர் கூறினார்.

கடந்த வாரம் சுகாதார அமைச்சராக பதவியேற்ற கைரி, பி.பி.என்.-இன் பல்வேறு கட்டங்களில், நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்ட பல்வேறு எஸ்.ஓ.பி. -களைப் பற்றி குறிப்பிட்டார்.

முன்னதாக, மலேசியர்கள் பல்வேறு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைகளுக்கான (பி.கே.பி.) எஸ்.ஓ.பி.-களுக்கு இணங்க வேண்டியிருந்தது, இதில் பல்வேறு துறைகள் மற்றும் இடங்களுக்கு வெவ்வேறு விதிகள் பயன்படுத்தப்பட்டன.

அரசாங்கம் இனி மொத்த கட்டுப்பாட்டு அணுகுமுறையைப் பயன்படுத்தாது என்று கைரி புதன்கிழமை கூறினார்.

பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்கும், அதே நேரத்தில் அவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பையும் கவனித்துக்கொள்வதற்கும் புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்படும் என்று கைரி கூறினார்.

அவர் புதிய எஸ்.ஓ.பி.-க்களை உருவாக்க எம்.கே.என்., நிதி அமைச்சு மற்றும் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சின் அமைச்சர்களுடன் இணைந்து பணியாற்றும் என்று கைரி மேலும் சொன்னார்.

“அடுத்த வாரம் நாங்கள் வேலையைத் தொடங்குவோம், செப்டம்பர் இறுதிக்குள், எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய எஸ்.ஓ.பி.-களின் பட்டியலை எங்களால் உருவாக்க முடியும்,” என்று அவர் கூறினார்.