‘மலேசியக் குடும்பம்’  உருவாக,  உறைவிடப் பள்ளிகளில் பயில வாய்ப்பளியுங்கள்  – இந்திய அமைப்புகள் கோரிக்கை

2022-ஆம் ஆண்டுக்கான உறைவிடப் பள்ளிகளுக்கு(Sekolah Berasrama Penuh) விண்ணப்பிக்க அனைத்து வகை பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்று  மலேசிய இந்திய அரசு சாரா அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. 

அண்மையில் நாட்டின் ஒன்பதாவது பிரதமர் டத்தோஸ்ரீ சப்ரி யாக்கோப் அவர்களால்  பிரகடனப்படுத்தப்பட்ட ‘மலேசியக் குடும்பம்’ என்ற கருத்தாக்கத்திற்கு ஏற்ப அனைத்துத் தரப்பு மாணவர்களுக்கும் இந்த வாய்ப்பை வழங்க வேண்டிய நேரம் வந்து விட்டதாக மலேசிய இந்திய அரசு சாரா அமைப்புகளின் கூட்டமைப்பின் கல்விப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் கந்தசுவாமி குறிப்பிட்டார். 

SBP எனப்படும் உறைவிடப் பள்ளிகள் அல்லது முழுத் தங்கும் வசதி கொண்ட பள்ளிகள் தொடங்கப்பட்டது முதல் அதில் இணைந்து பயில்வதற்குத் தேசியப் பள்ளிகள் (SK) மற்றும் தேசிய இடைநிலைப்பள்ளிகள் (SMK)-விலிருந்து வரும் மாணவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டு வந்துள்ளது.

இப்பள்ளிகளில் இணைந்து பயில்வதற்குப் பூமிபுத்ரா மாணவர்களுக்கு 90 விழுக்காட்டு இடமும் பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கு 10 விழுக்காட்டு வாய்ப்பும் வழங்கப்பட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்றைய நிலையில், தேசியச் சமயப் பள்ளிகள், SJKC மற்றும் SJKT எனப்படும் தாய்மொழிப் பள்ளிகள், ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்கள் இந்த உறைவிடப் பள்ளிகளில் பயில ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மேலும், SBP-யில் இணைந்து பயில விரும்பும் மாணவர்கள் அவர்களின் கல்வி அடைவுநிலை, இணைப் பாடத்திட்டம் மற்றும் ஆளுமை ஆகியவற்றைத் தவிர்த்து  UKSBP எனப்படும் நுழைவு தேர்வெழுத வேண்டும் என்பதால், அது அனைத்துலகைப் பள்ளிகளிலிருந்தும் சமமான தகுதிகளைக் கொண்ட மாணவர்களைத் தேர்வு செய்ய உதவும் என்பதையும்  குணசேகரன் கந்தசுவாமி சுட்டிக்காட்டினார். 

மேலும், அண்மையில் அறிவிக்கப்பட்ட MRSM எனப்படும் மாரா இளநிலை அறிவியல் கல்லூரிகளுக்கான விண்ணப்ப நடைமுறையைப் போன்று உறைவிடப் பள்ளிகளுக்கான விண்ணப்ப நடைமுறைகளும் இருக்கும் நிலையில் எந்த வேறுபாடுமின்றி அனைத்து வகை அரசாங்கப் பள்ளி மாணவர்களும் அதற்கு விண்ணப்பிக்க ஏதுவாக இருக்கும் என்றும் அவர் மேலும் விளக்கினார். 

இதனிடையே, இன்று  மலேசிய இந்திய அரசு சாரா அமைப்புகளின் கூட்டமைப்பினால் இது தொடர்பான கடிதம்  கல்விக்கான முதன்மை அமைச்சர் டத்தோ டாக்டர் முகமட் ராட்ஸி ஜடினிடம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதன் நகல் கல்வித் துணையமைச்சர்கள் செனட்டர் டத்தோ டாக்டர் மா ஹாங் சூன், டத்தோ முகமட் அலாமின் அவர்களுக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ சப்ரி யாக்கோப் அவர்களுக்கும் அனுப்பட்டுள்ளதாக  குணசேகரன் கந்தசுவாமி கூறினார். 

வழங்கப்படும் கல்வி வாய்ப்புகளுக்கு மலேசியர்கள் அனைவரும் விண்ணப்பிக்க வாய்ப்பினை வழங்கும் நிலையில், மலேசியக் குடும்பத்திலுள்ள அனைவரும் வேறுபாடின்றி நன்மையடைவர் என்கிறது மலேசிய இந்திய அரசு சாரா அமைப்புகளின் கூட்டமைப்பு.