இன்று, 19,307 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாகவும், இதன் மூலம் மொத்த தொற்று எண்ணிக்கை 1,919,774 நேர்வுகளானது என்றும் சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தனது கீச்சகம் மற்றும் முகநூல் வாயிலாக அறிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக நான்காவது நாளாக, சரவாக் 3,000-க்கும் அதிகமான புதிய நேர்வுகளைப் பதிவு செய்து வருகிறது.
எட்டு மாநிலங்களில் புதிய நேர்வுகள் 4 இலக்கங்களில் பதிவாகியுள்ளன.
இன்று முதல் முறையாக பெர்லிஸ் 100-க்கும் அதிகமான புதிய நேர்வுகளைப் பதிவு செய்தது.
அதே பதிவில், டாக்டர் நூர் ஹிஷாம், நாடு முழுவதும் கோவிட் -19 மருத்துவமனையின் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் (ஐசியு) படுக்கைகளின் பயன்பாடு இன்றுவரை, 1,575 படுக்கைகளில் 82 விழுக்காடு அல்லது 1,292, ஐசியு அல்லாத படுக்கைகள் 17,984-இல் 77 விழுக்காடு அல்லது 13,778 பயன்பாட்டில் உள்ளதாகவும் என்று கூறினார்.
மேலும், இன்று 361 கோவிட்-19 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது நாட்டில் இத்தொற்றுக்குப் பலியானவர் எண்ணிக்கையை 19,163- ஆக உயர்த்தியுள்ளது.
இதற்கிடையில் இன்று, 22,701 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 904 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 430 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.
மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-
சரவாக் (3,118), சிலாங்கூர் (2,700), சபா (2,298), பினாங்கு (2,243), ஜொகூர் (2,032), கிளந்தான் (1,438), கெடா (1,355), பேராக் (1,341), திரெங்கானு (910), பகாங் (661), கோலாலம்பூர் (513), மலாக்கா (340), நெகிரி செம்பிலான் (207), பெர்லிஸ் (108), புத்ராஜெயா (28), லாபுவான் (15).
மேலும் இன்று, 35 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன.