தற்போது, மலேசிய சுகாதார அமைச்சு (எம்.ஓ.எச்.) ‘கோவிட்நவ்’ (CovidNow) எனப்படும் புதிய இணையதளத்தின் வழி, கோவிட் -19 தொடர்பான விரிவான தகவல்களைப் பொதுமக்களுக்கு வெளிப்படுத்தி வருகிறது.
இது தற்போதுள்ள சமூக ஊடகக் கணக்குகள் மற்றும் ‘கிட்ஹப்’ (GitHub) தரவு சேமிப்பிற்கு இது கூடுதல் வசதியாகும்.
மூலத் தரவை வெளியிடும் ‘கிட்ஹப்’ போலல்லாமல், பொது மக்கள் மிக எளிதாக அணுகக்கூடிய வடிவத்தில் புள்ளிவிவரங்களை ‘கோவிட்நவ்’ வழங்குகிறது.
இருமொழிகளில், இணையதளத்தில் வெளியிடப்படும் தரவுகளில் சுவாசக்கருவி வசதிகள், மருத்துவமனை படுக்கைகள், தீவிரச் சிகிச்சை பிரிவுகள் (ஐசியு) மற்றும் தனிமைப்படுத்தல் மையங்கள் போன்ற சுகாதார வசதிகளின் தற்போதைய பயன்பாட்டு விகிதங்கள் உள்ளன.
இது நோயாளிகளுக்கு எங்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது மற்றும் அவர்கள் குணமடைந்தார்களா அல்லது இறந்தார்களா என்றத் தரவுகளால் வகுப்பதன் மூலம், கோவிட் -19 நேர்வுகள் பற்றிய ஆழமான தகவல்களை வழங்குகிறது.
இந்தப் புதிய இணையதளம், தினமும் இரவு 11.59 மணிக்குள் புதுப்பிக்கப்படும் என்று சுகாதார அமைச்சு நம்பிக்கை தெரிவித்தது.
இன்று பிற்பகல், இப்புதிய முயற்சியை அறிவித்த சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன், கோவிட் -19 குறித்த கூடுதல் தரவுகளைப் பொதுமக்களுக்கு வழங்குவதற்கான தனது முந்தைய உறுதிமொழிக்கு ஏற்ப இது அமைந்துள்ளதாகக் கூறினார்.
கோவிட் -19 தொற்றுநோய் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் சமூகத்தின் புரிதலையும் தற்போதைய தேவைகளைக் கடைப்பிடிப்பதையும் இந்த வசதி ஊக்குவிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
“கூடுதலாக, கோவிட் -19 தொற்றுடன் நாம் ஒரு புதிய கட்ட வாழ்க்கைக்குள் நுழைவதால், நடத்தை மாற்றத்தையும் செந்தர இயங்குதல் நடைமுறைகளுடன் (எஸ்.ஓ.பி.) சிறந்த இணக்கத்தையும் இது ஏற்படுத்தும் என்று சுகாதார அமைச்சு நம்புகிறது,” என்று அவர் இன்று செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.