ஆய்வாளர்கள் : நஜிப்புக்கு இடமளித்தால் அரசாங்கத்தின் பிம்பம் பாதிக்கப்படும்

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு, மீண்டும் நாட்டின் நிர்வாகத்தில் ஓர் இடம் வழங்கப்பட்டால் அரசு எதிர்மறையான பிம்பத்தைப் பெறும் என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மலேசியத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் அஸ்மி ஹாசனின் கூற்றுப்படி, இது சட்டக் கடப்பாடுள்ள அரசியல் தலைவர்களை அரசாங்கம் இன்னும் முன்னிலைப்படுத்த விரும்புவதாக காட்டுகிறது.

“இது அம்னோவுக்கு மட்டுமல்ல, அரசாங்கத்திற்கும் எதிர்மறையான உணர்வை அளிக்கும், அனுபவமுள்ளவர்களாக இருந்தாலும் சட்டக் கடப்பாடுகளைக் கொண்ட மூத்தவர்களை முன்னிலைப்படுத்த விரும்புவதாகக் கருதப்படும்.

“எனவே, அம்னோவை ஒடுக்க ஆயுதங்களைத் தேடும் குழுக்களுக்கு, இதுவும் ஒரு வாய்ப்பாகி, அம்னோவைத் தாக்க எளிதாக்கிவிடும்,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

நாட்டு மீட்சி மன்றத்தின் (எம்பிஎன்) தலைவராக நியமிக்கப்பட்ட முஹைதீன் யாசினைப் போல், அரசாங்கத்தில் நஜிப்புக்கும் ஓர் இடம் வழங்கப்பட வேண்டும் என்ற அம்னோ மூத்தத் தலைமைச் செயலாளர் முஸ்தபா யாகூப்பின் அழைப்பு குறித்து கருத்து கேட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.

நஜிப் அனுபவம் உள்ளவர் என்று விவரித்த முஸ்தபா, இது இஸ்மாயில் சப்ரி யாகோப் கொண்டு வந்த மலேசியக் குடும்பத்தின் உற்சாகத்திற்கு ஏற்ப அமையும் என்றும் கூறினார்.

மலேசியத் தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஜமாயி ஹாமில், முன்னாள் பிரதமர் என்ற நிலைப்பாட்டின் அடிப்படையில் நஜிப் பரிந்துரைக்கப்படுகிறார் என்றால், டாக்டர் மகாதீர் முகமட் பெயரும் முன்மொழியப்படலாமா என்று கேள்வி எழுப்பினார்.

“நிச்சயமாக, இது அரசாங்கத்தின் மீது எதிர்மறையான பார்வையைக் கொண்டு வரும், மேலும் அம்னோ முக்கியமான அமைச்சுகளை வைத்திருக்கும் கட்சி என்பதால் அது அரசாங்கமாகவும் கருதப்படும்.

“இது (முன்மொழிவு) நஜிப் முன்னாள் பிரதமர் என்ற வகையில் என்றால், டாக்டர் மகாதீருக்கும் ஏன் இந்த வாய்ப்பு அளிக்கப்படவில்லை?” என்று அவர் மேலும் கேள்வி எழுப்பிறினார்.

கடந்த செப்டம்பர் 4-ம் தேதி, முஹைதீனை அவரது முந்தைய பதவியின் அடிப்படையில் எம்பிஎன் தலைவராக நியமிப்பதாக அரசாங்கம் அறிவித்தது.

நேர்மறை விளைவுகள் உண்டு, ஆனால் எதிர்மறைகள் அதிகம்

இருப்பினும், அஸ்மியும் ஜமாயியும் அந்தப் பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினர் எம்பிஎன்-இல் பங்காற்றினால் நேர்மறையான விளைவுகள் இருக்கும் என்பதை ஒப்புக் கொண்டனர்.

நாட்டின் முன்னாள் தலைவராக, நஜிப்பின் அனுபவத்தை இன்னும் மதிக்கும் அம்னோ அடிமட்ட மக்களுக்கு இந்த நியமனம் ஓரளவுக்குச் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அஸ்மி கூறினார்.

“ஆனால், நீங்கள் ஒப்பிட்டுப் பார்த்தால், எதிர்மறையான விளைவுகள் இன்னும் அதிகம், ஏனெனில் அம்னோவை இழிவாகக் கருதுபவர்களுக்கு, அம்னோ இன்னும் மாற விரும்பவில்லை என்று சொல்ல ஓர் ஆயுதமாக இது பயன்படும்,” என்று அவர் கூறினார்.

ஜமாயியைப் பொறுத்தவரை, சாதகமான பக்கத்தைக் கண்ணுற்றால், நஜிப் ஓர் அனுபவமிக்க மற்றும் நீண்டகால அரசாங்கத்தின் உறுப்பினர் – பஹாங் மந்திரி பெசாராக பதவி வகித்துள்ளார், மேலும் பல்வேறு அமைச்சுகளில் பணியாற்றியுள்ளார்.

“எனவே, அவரது அனுபவம் முஹைதீனுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பைப் போல நாட்டுக்கு நன்மைகளைத் தரக்கூடும்.

“ஒருவேளை அவரால் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவ முடியும்,” என்று அவர் மேலும் கூறினார்.

இருப்பினும், நஜிப் சம்பந்தப்பட்ட நீதிமன்ற வழக்குகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, தற்போதைய அரசாங்கம் இது போன்ற விஷயங்களில் ஈடுபடக்கூடாது என்று ஆஸ்மி கூறினார்.

மேலும், அடுத்த மக்களவை அமர்வில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படாது என்ற அறிக்கையைக் குறிப்பிட தேவையில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

“தற்போது, ​​அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட வேண்டிய அவசியமில்லை, இருப்பினும் விரிவான அனுபவமுள்ள நஜிப் அரசாங்கத்திற்கு உதவ முடியும் என்று சிலர் நினைக்கிறார்கள்,” என்று கூறிய அவர், நாட்டின் மீட்சி திட்டங்கள் குறித்த தனது கருத்தை நஜிப் நாடாளுமன்றத்தில்கூட தெரிவிக்க முடியும் என்றார்.