பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) மற்றும் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் இடையே நம்பிக்கை மற்றும் வழங்கல் ஒப்பந்தத்தில் (சிஎஸ்ஏ) கையெழுத்திடும் நிகழ்வு விரைவில் நடைபெறவுள்ளது.
இருந்தும், எதிர்க்கட்சி முகாமில் உள்ள சில தலைவர்கள் இந்த ஒப்பந்தம் குறித்து எச்சரிக்கையாக உள்ளனர்.
பி.எச். சார்ந்த ஓர் ஆதாரம், இந்த ஒப்பந்தம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்ற கவலைகள் இருப்பதாக மலேசியாகினியிடம் கூறினார்.
இது, அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் பி.எச். ஏற்றுக்கொள்கிறது என்ற தவறான உணர்வை ஏற்படுத்தும் என்ற கவலையையும் உள்ளடக்கியது என்று அவர் கூறினார்.
“பி.எச். மத்தியில் பயம் இருக்கிறது… நாங்கள் அரசாங்கத்திற்குச் சட்டபூர்வமான அங்கீகாரம் வழங்குகிறோமா அல்லது அவர்கள் என்ன செய்கிறார்களோ அதனை ஆமோதிக்கிறோமா என மக்கள் கேட்க தொடங்கிவிட்டனர்.
“எங்களை அரசாங்கம் வாங்கிவிட்டது போல் நினைக்கிறார்கள், அது நடக்காது,” என்று கட்சியில் பதவி வகிக்கும் மற்றும் தற்போதைய பி.எச். பேச்சுவார்த்தைகளின் தகவல்களை அறிந்த ஓர் ஆதாரம் கூறினார்.
எனினும், இந்த விஷயம் உணர்ச்சிபூர்வமான ஒன்றாக இருப்பதால், பெயரை வெளியிட வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இஸ்மாயிலுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிஎச்-இன் நடவடிக்கை, நாட்டில் அரசியல் நிலைத்தன்மையை உருவாக்கவும், அதே நேரத்தில் நிறுவன சீர்திருத்தங்களைச் செயல்படுத்தவும் நேர்மையான நோக்கத்துடன் இருந்தது என்று அந்த ஆதாரம் கூறியது.
எவ்வாறாயினும், அம்னோ தலைமையிலான அரசாங்கத்திற்குப் பி.எச். வரம்பற்ற ஆதரவை வழங்குவது போல் அவர்கள் பார்க்க விரும்பவில்லை என்று அவர் கூறினார்.
பி.எச். உயர்மட்ட தலைவருக்கும் பிரதமருக்கும் இடையில் ஆகஸ்ட் 25-ம் தேதி சந்திப்பு நடந்தது.