பிஎஸ்எம் : 12-வது மலேசியத் திட்டத்தில் இனம் சார்ந்த பரப்புரையைத் தடை செய்ய வேண்டும்

மலேசிய சோசலிசக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் சரண்ராஜ், 12-வது மலேசியத் திட்டத்தில் இனம் சார்ந்த பரப்புரையை விமர்சித்தார்.

சில “இனம் சார்ந்த உயரடுக்குவாதிகள்”, இந்தியச் சமூகத்திற்காக 12-வது மலேசியத் திட்டத்தை வகுப்பதில் பரப்புரை செய்து வருவதாகவும், ஆனால் அவர்களின் நிகழ்ச்சி நிரலில் அவர் சந்தேகம் கொண்டிருப்பதாகவும் ஷரன் கூறினார்.

“இவர்கள் தங்களை வளப்படுத்திக் கொள்வதற்காக, மக்களின் வறுமையை இன மயமாக்குகிறார்கள்,” என்று அவர் கூறினார்.

மலேசிய இந்தியர் உருமாற்றத் திட்டம் (மித்ரா), இந்தியச் சமூகத்திற்கு உதவுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஓர் அரசு நிறுவனம், சமூகத்திற்காக RM500 மில்லியன் ஒதுக்கீடு செய்திருப்பதாக ஷரன் குறிப்பிட்டார், ஆனால் அது உண்மையில் அந்தக் குழுவிற்கு உதவியதா என்று அவர் கேள்வி எழுப்பினார்.

“அடிப்படையில், மித்ரா அரசியல் ரீதியாக இணைக்கப்பட்ட மக்களுக்கு, ஒரு நிகழ்வு நிதி அமைப்பாக மாறியது.

“RM500 மில்லியனைக் கொண்டு, முதுமை காலத்தில் வீட்டு வசதி இல்லாமல், பாதுகாப்பற்றிருக்கும் 5,000 குடும்பங்களுக்கு வீடுகளை வழங்கியிருக்கலாம்,” என்று அவர் மேலும் கூறினார்.

அரசாங்கத்தில் குத்தகை அடிப்படையில் பணியாற்றும் 250,000 துப்புரவுப் பணியாளர்களுக்கும் பாதுகாவலர்களுக்கும் இந்த நிதி மிகவும் தேவைப்படுவதாக சரண் கூறினார்.

அரசாங்க சேவையில் வேலைக்கமர்த்த வேண்டியதற்குப் பதிலாக, அவர்கள் தனியார் நிறுவனங்களில், குத்தகை அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர் என்று அவர் கூறினார்.

அரசாங்கக் குத்தகை பணியாளர்கள் வலையமைப்பின் (ஜெ.பி.கே.கே.) கூற்றுபடி, அரசு பள்ளிகளில் பாதுகாவலர்களை நிர்வகிப்பதற்காக, தனக்கு நெருக்கமான ஒப்பந்தக்காரர்களுக்கு அரசாங்கம் ஆண்டுக்கு 1.5 பில்லியன் ரிங்கிட் செலுத்துகிறது.

வாரத்திற்கு 84 மணிநேரம் பணிபுரியும் 40,000 பாதுகாவலர்களின் ஒட்டுமொத்த ஊதியம் சுமார் ரிம 1 பில்லியன் மட்டுமே ஆகும்.

“அடிப்படையில், இந்த ஒப்பந்ததாரர்கள் அரசாங்கத்தின் சார்பாக குறைந்தபட்ச ஊதியத்தைச் செலுத்த 500 மில்லியன் ரிங்கிட் கமிஷன்களைப் பெறுகிறார்கள்,” என்று அவர் கூறினார். 

“இந்த வேலைகளை மீண்டும் தேசியமயமாக்குவதன் மூலம், அரசுக்கு நெருக்கமான ஒப்பந்தக்காரர்களின் பிரீமியத்தை மறுவிநியோகம் செய்து, வறுமையிலிருக்கும் ஊழியர்களை மீட்பதற்காக, அவர்களின் ஊதியத்தை உயர்த்தலாம்,” என்று அவர் மேலும் கூறினார்.

தேவைப்படுபவர்களுக்கு உதவுவதற்குப் பதிலாக, இனப் பிரச்சினைகளைத் தங்கள் நலனுக்காகப் பயன்படுத்த முயலும் உயரடுக்கு வர்க்கத்தைச் சரண் கடுமையாக சாடினார்.

“இந்தத் தார்மீக மற்றும் அறிவார்ந்த சிந்தனையில்லாத இன உயரடுக்கினர், பிளவு மற்றும் ஆதிக்கத்தை கொண்டு சமூகத்தில் ஒட்டுண்ணிகளாக இனவெறியை நுழைத்து விளையாடுகிறார்கள்.

“அவர்கள் இனவெறி மற்றும் வறுமையை முடிவுக்குக் கொண்டுவருவதில் ஆர்வம் காட்டுவதில்லை, ஏனெனில் இது சமுதாயத்தைக் கொள்ளையடிக்க அனுமதிக்கிறது,” என்று அவர் மேலும் கூறினார்.