18 முதல் 20 வயதுக்குட்பட்ட இளைஞர்களை, மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கும் வகையில் அந்தந்த மாநில அரசியலமைப்பில் திருத்தம் செய்யுமாறு ஐந்து மாநிலங்களுக்கு இளம் வாக்காளர் சங்கம் (வாக்கு18) அழைப்பு விடுத்துள்ளது.

பெர்லிஸ், பேராக், கிளந்தான், திரெங்கானு, சபா மற்றும் சரவாக் மற்றும் சமீபத்தில் பினாங்கு மாநில அரசுகளின் முயற்சிகளை வாக்கு18 பாராட்டுகிறது; மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான வயது வரம்பைப் பிரிவு 4-இன் கீழ் குறைத்து, அந்தந்த மாநில அரசியலமைப்பின் திருத்தம் மூலம் கூட்டாட்சி அரசியலமைப்பின் உணர்வு கடைபிடிக்கப்பட்டதை அவை காட்டுகின்றன.
“கெடா, பஹாங், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா மற்றும் ஜொகூர் ஆகிய மாநில அரசுகளும், 18 முதல் 20 வயதுள்ள இளைஞர்களைத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கும் வகையில், அந்தந்த மாநில அரசியலமைப்பைத் திருத்துவதற்கு ஆதரவளிக்க வேண்டுமென நாங்கள் அழைக்கிறோம்,” என்று வாக்கு18 நேற்று ஓர் அறிக்கையில் கூறியது.
அரசியலமைப்பு (திருத்தம்) சட்டம் 2019 என அறியப்படும் மசோதா, 18 ஜூலை 2019-இல் நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இது பிரிவு 3 (a) உட்பட மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது, இது கூட்டாட்சி மற்றும் மாநிலத் தேர்தல்களில் வாக்காளர்களின் குறைந்தபட்ச வயதை 21 ஆண்டுகளில் இருந்து 18 வயதாகக் குறைப்பதைக் குறிக்கிறது, பிரிவு 3 (b) தானியங்கி வாக்காளர் பதிவு மற்றும் பிரிவு 4 சட்டமன்ற உறுப்பினராவதற்கான வயது வரம்பை 21 வயதிலிருந்து 18 வயதுக்குக் குறைப்பதாகும்.
பிரிவு 4-க்கான கூட்டாட்சி அரசியலமைப்பின் திருத்தங்கள் மாநில அரசியலமைப்பிற்கு இணங்க வேண்டும், ஏனெனில் இது நாட்டின் உச்ச சட்டம்.
“சட்டமன்ற உறுப்பினராக இருப்பதற்கான வயது வரம்பைக் குறைப்பது, இளைஞர்கள் தங்கள் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்ற ஒரு வலுவான செய்தியைக் கொண்டுள்ளது என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று வாக்கு18 கூறியது.
கடந்த வெள்ளிக்கிழமை, பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப், அமைச்சரவை ஏழு நிறுவன சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளித்ததாக அறிவித்தார், இதில் வாக்களிக்கும் வயதை 21-லிருந்து 18-ஆக குறைப்பது நடைமுறைப்படுத்தப்பட்டது.
சமீபத்தில், கூச்சிங் உயர் நீதிமன்றம் டிசம்பர் 31 முதல், வாக்களிக்கும் வயதை 18-ஆக அமல்படுத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.

வாக்கு18-ஐ அமல்படுத்துமாறு மத்திய அரசை கேட்டுக்கொள்ள வேண்டுமென்ற, சரவாக்கைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் விடுத்த நீதித்துறை மறுஆய்வு விண்ணப்பத்தை கூச்சிங் நீதிமன்றம் அனுமதித்தது.
செப்டம்பர் 7-ம் தேதி, பிரதமர் துறை அமைச்சர் (நாடாளுமன்றம் மற்றும் சட்டம்) வான் ஜுனைடி துவான்கு ஜாஃபார், கூச்சிங் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய எந்த அறிவுறுத்தலும் இல்லை என்று கூறினார்.
வாக்கு18-ஐ அமல்படுத்தப்படுவதால், 18 வயது முதல் 21 வயதுக்குட்பட்ட 1.9 மில்லியன் தனிநபர்கள் புதிய வாக்காளர்களாகப் பதிவு செய்யப்படுவார்கள். 21 வயதுக்கு மேற்பட்ட 4.4 மில்லியன் தனிநபர்கள் இன்னும் பதிவு செய்யப்படவில்லை.

























