ஈப்போ, உலு கிந்தா, பஹாகியா மருத்துவமனையில், ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களாகப் பணிக்கு அமர்ந்தப்பட்ட 40 பேர், நியாயமான சம்பள உயர்வு RM30 உட்பட, பல கோரிக்கைகளை முன்வைத்து, அந்த மனநல மருத்துவமனைக்கு வெளியே இன்று போராட்டம் நடத்தினர்.
ஜனவரி 1-ம் தேதி, பேராக், பினாங்கு, கெடா மற்றும் பெர்லிஸில் உள்ள அரசு மருத்துவமனை துப்புரவு ஒப்பந்தங்களை எட்ஜெண்டா யுஇஎம்எஸ் (Edgenta UEMS) – யூஇஎம் எட்ஜெண்டாவின் அரசுடன் தொடர்புடைய நிறுவனம் – கையகப்படுத்திய பிறகு, இந்தப் பிரச்சனை எழுந்தது என்று தீபகற்ப மலேசிய அரசு மருத்துவமனைகளில் தனியார் ஊழியர் ஆதரவு சேவைகளின் ஒன்றியத்தின் நிர்வாகச் செயலர் எம். சரஸ்வதி கூறினார்.

ஜூலை முதல் RM30 அதிகரிப்பு அனைத்து ஊழியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும், அவர்களின் மதிப்பீடுகளில் தேர்ச்சி பெற்ற ஒரு சிலருக்கு மட்டும் அல்ல என்பது அவர்களின் முக்கியக் கோரிக்கைகளில் ஒன்று.
“புதிய சம்பளம் RM1,230, ஆனால் 90 விழுக்காடு ஒப்பந்தத் துப்புரவு தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கவில்லை.
“யுஇஎம்எஸ் நிச்சயமாக அனைத்து ஊழியர்களுக்கும் RM30 என்ற சிறிய அதிகரிப்பை வழங்க முடியும்,” என்று சரஸ்வதி ஓர் அறிக்கையில் கூறினார்.
தொழிலாளர்கள் தங்களின் முந்தைய பொது விடுமுறைகள் மற்றும் மருத்துவக் கொடுப்பனவு சலுகைகளை, 15 நாட்களில் இருந்து 11 நாட்களாகவும், RM1,000-லிருந்து RM200-ஆக குறைத்ததையும் மாற்றியமைக்க கோரியதாகவும் அவர் சொன்னார்.
அங்குக் கூடியிருந்த தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளைத் தாங்கியப் பதாகைகளை ஏந்தியிருந்தனர், அதில் கோவிட் -19 அபாயகரப் பணி கொடுப்பனவு, புதிய சீருடைகள் மற்றும் (ஒரு முறை) RM700 செலுத்துதல் ஆகியவையும் அடங்கும்.
நாட்டின் மிகப்பெரிய மனநல மருத்துவமனை என அறியப்படும் பஹாகியா உலு கிண்டா மருத்துவமனை, கோவிட் -19 நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.

முன்னதாக, இன்று மதியம் 4 மணிக்கு, சுமார் 20 நிமிடங்கள் நீடித்த மறியலில் சரஸ்வதி கலந்துகொண்டார், மறியலுக்குப் பின்னர் அவர்கள் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.
“தொழிற்சங்கச் சட்டம் 1959-இன் கீழ், மறியலில் ஈடுபடுவது எங்கள் உரிமை. இது ஊழியர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையிலான பிரச்சனை.
“இன்று நாங்கள் காவல்துறை அறிவுறுத்தல்களைப் பின்பற்றுகிறோம், ஆனால் இந்த விஷயம் இதோடு முடிவடையப் போவதில்லை,” என்று சரஸ்வதி கூறினார்.
முன்னதாக, ஈப்போ மாவட்டப் போலீஸ் தலைமையகத்திலிருந்து தன்னைத் தொடர்பு கொண்டதாகவும், தொழிற்சங்கம் மற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்துள்ளதா என்று கேட்டதாகவும் பிஎஸ்எம் செயற்குழு உறுப்பினருமான சரஸ்வதி மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
மலேசியாகினி எட்ஜெண்டா யுஇஎம்எஸ் -ஐ தொடர்பு கொண்டு, ஊழியர்களின் கோரிக்கை பற்றி கருத்து கேட்டுள்ளது.

























