கோவிட் -19 (செப்.18) : 388 உயிரிழப்புகள், மொத்தம் 22,743

கிதப் (Github) தளத்தில் உள்ள சுகாதார அமைச்சின் தரவு, நேற்று (செப்டம்பர் 17) கோவிட் -19 காரணமாக மொத்தம் 388 இறப்புகளைப் பதிவுசெய்தது, இதுவரையிலான இறப்பு எண்ணிக்கை 22,743 ஆக அதிகரித்துள்ளது.

அந்த எண்ணிக்கையில், 64 பேர் (16.49 விழுக்காடு) மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படுவதற்கு முன்பே இறந்தனர்.

388 இறப்புகளில், 192 கடந்த ஏழு நாட்களில் பதிவானவை, நேற்று ஒன்பது நோயாளிகள் மட்டுமே இறந்தனர்.

மற்றொரு 198 இறப்புகள் ஒரு வாரத்திற்கு முன்பு நிகழ்ந்தவை, தரவு பின்னடைவு காரணமாக தற்போது பதிவாகியுள்ளன. உண்மையில் ஏப்ரல் மாதத்தில் பல மரணங்கள் நிகழ்ந்தன.

கடந்த 30 நாட்களில், சராசரி தினசரி இறப்பு 315, கடந்த ஏழு நாட்களின் சராசரி இறப்பு 417 ஆகும்.

சிலாங்கூர் 167 இறப்புகளுடன் அதிக எண்ணிக்கையிலான புதிய இறப்புகளைப் பதிவு செய்துள்ளது, இது புதிய இறப்புகளில் 43.04 விழுக்காடு ஆகும்.

அதைத் தொடர்ந்து, ஜொகூர் (76), கெடா (48), பினாங்கு (24), சபா (22), பஹாங் (12), கோலாலம்பூர் (12), கிளந்தான் (10), பேராக் (7), திரெங்கானு (5), பெர்லிஸ் (2), சரவாக் (2) மற்றும் நெகிரி செம்பிலான் (1) என மரண எண்ணிக்கைகள் பதிவாகியுள்ளன.

ஜொகூரில் ஒரு நாளில் பதிவான அதிகபட்ச இறப்பு விகிதம் இதுவாகும். மாநிலத்தில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை சிலாங்கூரை அடுத்து இரண்டாவது அதிகமாகும்.

மலாக்கா, லாபுவான் மற்றும் புத்ராஜயாவில் புதிய இறப்புகள் இல்லை.

நேற்றைய நிலவரப்படி, கோவிட் -19 தொற்றின் செயலில் உள்ள நேர்வுகள் 221,339. ஆகஸ்ட் 28-ம் தேதி, அதிக எண்ணிக்கையை அடைந்த பிறகு இந்த எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.

முன்பு, சுகாதார அமைச்சு, புதிய நேர்வுகளுடன் இறப்பு புள்ளிவிவரங்களை ஒவ்வொரு மாலையிலும் அறிவித்தது.

ஆனால், தற்போது மரண எண்ணிக்கை நள்ளிரவில் அறிவிக்கப்படுவதால், மலேசியாகினி ஒரு நாள் கழித்து அதனை வெளியிடும்.