மருத்துவமனை துப்புரவு தொழிலாளர் சங்கத்தின் குற்றச்சாட்டுகளால் யு.இ.எம். எட்ஜெண்டா வருத்தம்

பேராக், தஞ்சோங் ரம்புத்தானில் உள்ள பஹாகியா உலு கிந்தா மருத்துவமனையில் துப்புரவு சேவைகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தைப் பெற்ற யு.இ.எம். எட்ஜெண்டா பெர்ஹாட், தனது ஊழியர்களிடம் அநியாயமாக நடந்து கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு வருத்தம் தெரிவித்தது.

ஊழியர்களின் பணிச்சூழலையும் நலனையும் மேம்படுத்த, அந்நிறுவனம் பெரும்பாலும் தொழிலாளர்களையும் தொழிற்சங்கங்களையும் தொடர்பு கொள்கிறது என்று அது கூறியுள்ளது.

நேற்று பிற்பகல், RM30 சம்பள உயர்வு மற்றும் பிற சலுகைகளைக் கோரி, 40 மருத்துவமனை துப்புரவு பணியாளர்கள் மருத்துவமனைக்கு வெளியே மறியலில் ஈடுபட்டனர்.

“இப்போது வரை, நிறுவனம் தொழிற்சங்கம் மற்றும் அதன் துணை நிறுவனங்களுடன் தொழில்முறை மற்றும் ஒழுங்கு முறையில் தொடர்பு கொண்டுள்ளது.

தொழில்துறை நடைமுறைக்கு ஏற்ப, நியாயமான மற்றும் சமமான முதலாளியாக, சம்பளம் அல்லது ஊக்கத்தொகை, போனஸ், சம்பள உயர்வு அல்லது பிற வெகுமதிகள் உள்ளிட்ட ஒவ்வொரு முடிவும் மலேசியத் தொழிலாளர் சட்டத்திற்கு இணங்க வணிகத்தின் செயல்திறன், தகுதி மற்றும் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு யு.இ.எம். எட்ஜெண்டா செயல்படுகிறது.

“எனவே, இந்த நிறுவனத்தின் பராமரிப்பில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் சேவை இடையூறுகள் இல்லை என்பதை நாங்கள் தொடர்ந்து உறுதி செய்வோம் என்று பொதுமக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறோம்,” என்று அது ஓர் அறிக்கையில் கூறியது.

ஜிஎல்சி யுஇஎம் குழுமத்தின் துணை நிறுவனமான, யுஇஎம் எட்ஜெண்டா 2001 முதல் கஸானா நேஷனல் பெர்ஹாட்டின் துணை நிறுவனத்திற்குச் சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று முற்பகல், தீபகற்ப மலேசிய அரசு மருத்துவமனைகளில் தனியார் ஊழியர் ஆதரவு சேவைகளின் ஒன்றியம், அந்த மனநல மருத்துவமனைக்கு வெளியே சுமார் 20 நிமிடங்கள் நீடித்த மறியலை ஏற்பாடு செய்தது.

மற்றவற்றுடன், ஜூலை முதல் RM30 அதிகரிப்பு அனைத்து ஊழியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும், அவர்களின் மதிப்பீடுகளில் தேர்ச்சி பெற்ற ஒரு சிலருக்கு மட்டும் அல்ல என்பது அவர்களின் முக்கியக் கோரிக்கைகளில் ஒன்றாக இருந்தது.

புதிய சம்பளமான RM1 230, 90 விழுக்காடு ஒப்பந்தத் துப்புரவு தொழிலாளர்களுக்குக் கிடைக்கவில்லை என்றும் அக்குழுவினர் குற்றஞ்சாட்டினர்.

தொழிலாளர்கள் தங்களின் முந்தைய பொது விடுமுறைகள் மற்றும் மருத்துவக் கொடுப்பனவு சலுகைகளை, 15 நாட்களில் இருந்து 11 நாட்களாகவும், RM1,000-லிருந்து RM200-ஆக குறைத்ததை மாற்றியமைக்கவும் கோரிக்கை வைத்தனர்.