கெடா மந்திரி பெசார் முஹம்மது சனுசி நோர், முக்ரிஸ் மகாதீர் நிர்வாகத்தின் போது, கெடா மந்திரி பெசார் இன்கார்பரேட்டட் (எம்.பி.ஐ.)-க்குச் சொந்தமான RM13 மில்லியன் வெளிநாடுகளில் உள்ள வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்பட்டதாகக் கூறினார்.
குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த முக்ரிஸ், சனுசியின் குற்றச்சாட்டுகளை அதிகாரப்பூர்வ அறிக்கையுடன் விவரிக்க சவால் விடுத்தார்.
நிருபர்கள் இந்த விவகாரம் தொடர்பான கேள்விகளை எழுப்பியபோது, இந்தக் குற்றச்சாட்டைக் கேட்டது இதுவே முதல் முறை என்றும் அந்த ஜித்ரா சட்டமன்ற உறுப்பினர் கூறினார்.
சினார் ஹரியான் செய்தித்தாளின் படி, அரசு பணத்தில் 13 மில்லியன் ரிங்கிட் கனடாவில் உள்ள வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டதற்கான ஆதாரம் இருப்பதாக சனுசி கூறினார்.
நேற்று, அலோர் ஸ்டாரில், கெடா மாநில ஆட்சிகுழு கூட்ட அமர்வுக்குப் பிறகு ஒரு மெய்நிகர் செய்தியாளர் சந்திப்பில் சனுசி இந்தத் தகவலை வெளியிட்டார்.
“மாநிலச் சட்டமன்ற அமர்வில், முக்ரிஸ் பழைய விஷயங்களைப் பற்றி குறிப்பிட்டார். நான் பேச நினைக்கவில்லை. அவர் விஷயத்தை எழுப்பியதால், நான் பதிலளித்தேன்.
கனடாவில், ஒரு கணக்கிற்கு 13 மில்லியன் ரிங்கிட் எம்பிஐ பணம் மாற்றுவது தொடர்பாக ஒரு பழைய வழக்கு உள்ளது.
“நான் இதை யாரிடமும் குறிப்பிடவில்லை. நான் இன்று குறிப்பிட்டேன்,” என்று அவர் செய்தித்தாளில் மேற்கோள் காட்டினார்.
1988-இல் நிறுவப்பட்டது, எம்.பி.ஐ. மாநில அரசுக்குச் சொந்தமானது மற்றும் தற்போதைய மந்திரி பெசாரின் தலைமையில் செயல்படுகிறது.
அதன் வலைத்தளத்தின்படி, அந்நிறுவனம் சுரங்கம், சொத்து மேம்பாடு, தொலைத்தொடர்பு போன்ற துறைகளில் ஆர்வங்களைக் கொண்டுள்ளது.
முக்ரிஸ், இரண்டு முறை கெடா எம்பியாக இருந்தார் – முதலில் மே 2013 முதல் பிப்ரவரி 2016 வரையிலும், இரண்டாவது முறை மே 2018 முதல் மே 2020 வரையில்.