பள்ளிகளுக்குச் சுய பரிசோதனை கருவிகளை அரசு வழங்கும்

நாடாளுமன்றம் | அக்டோபர் 3 முதல், தேசிய மீட்சி திட்டத்தில் (பிபிஎன்) கட்டங்கட்டமாகப் பள்ளிகள் செயல்பாட்டிற்குத் தயாராவதற்கு, கல்வி அமைச்சசு கோவிட் -19 சுய-சோதனை கருவிகளை அமைச்சின் கீழ் உள்ள தினசரி பள்ளிகளுக்கு வழங்கும்.

சம்பந்தப்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் உமிழ்நீர் கண்டறியும் சோதனை கருவி வழங்கப்படும் என்றும் மாணவர்கள் பள்ளி அமர்வைத் தொடங்குவதற்கு முன்பு சோதனை நடத்தப்படும் என்றும் மூத்தக் கல்வி அமைச்சர் டாக்டர் ராட்ஸி ஜிடின் கூறினார்.

முன்னதாக, கோவிட் -19 திரையிடல் சோதனையை ராட்ஸி அறிவித்தார், முழு உறைவிடப் பள்ளிகள் மற்றும் பகல் நேரப் பள்ளிகளுக்குத் திரும்பும் மாணவர்களுக்கு சுய-சோதனை கருவியைப் பயன்படுத்தி சோதனை நடத்தப்படும்.

இதற்கிடையில், மாணவர் தடுப்பூசி திட்டத்திற்காக கிள்ளானில் உள்ள பள்ளிகளின் பெற்றோர், ஆசிரியர் சங்கம் RM1,600-ஐ மாவட்டக் கல்வி அலுவலகத்திற்குச் செலுத்த வேண்டும் என்ற குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த ராட்ஸி, இதனை இரத்து செய்ய கல்வி அமைச்சு உத்தரவிட்டதாகக் கூறினார்.

இது ஒரு தவறான புரிதலின் காரணமாக நடந்தது என்றும், பள்ளி மாணவர்களுக்கான தடுப்பூசி திட்டத்திற்குப் பெற்றோர், ஆசிரியர் சங்கம் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது கல்வி அமைச்சின் கொள்கை அல்ல என்றும் அவர் கூறினார்.

செப்டம்பர் 20 நிலவரப்படி, கல்விதுறை சார்ந்த ஊழியர்களுக்கான தடுப்பூசி பற்றியும் ராட்ஸி தெரிவித்தார், அதாவது 90.5 விழுக்காடு ஆசிரியர்கள், 85.8 விழுக்காடு அமலாக்கக் குழு உறுப்பினர்கள் (ஏகேபி) மற்றும் 79.2 விழுக்காடு ஆதரவு சேவை ஊழியர்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

“தற்போது, ​​7.2 விழுக்காடு ஆசிரியர்கள், 11.4 விழுக்காடு ஏகேபிகள் மற்றும் 15.1 விழுக்காடு ஆதரவு சேவை ஊழியர்கள் இரண்டாவது மருந்தளவு ஊசிக்காக காத்திருக்கிறார்கள்,” என்று அவர் கூறினார்.

தடுப்பூசி போட மறுத்த 2,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு எதிரான நடவடிக்கை குறித்து, பொதுச் சேவைத் துறையுடன் (ஜெபிஏ) கலந்துரையாடிய பிறகு அது தேசியப் பாதுகாப்பு மன்றத்திடம் (எம்.கே.என்.) அளிக்கப்படும் என்றார் அவர்.

  • பெர்னாமா