ஓட்டுநர் உரிமம் : மூத்தக் குடிமக்களைத் தொந்தரவு செய்யாதீர்கள் – அம்னோ

70 வயதுக்கு மேற்பட்ட மூத்தக் குடிமக்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவதை மட்டுப்படுத்த விரும்பினால், போக்குவரத்து குற்றங்கள் மற்றும் சுகாதாரக் காரணிகளின் பதிவை அரசாங்கம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அம்னோ தலைவர் ஜாஹித் ஹமிடி பரிந்துரைத்தார்.

“மூத்தக் குடிமக்களுக்குச் சுமையை ஏற்படுத்தும் பல்வேறு நடைமுறைகளால் அவர்களைத் தொந்தரவு செய்யாதீர்கள்.

“ஒருவேளை பரீட்சைக்கு உட்படுத்த வேண்டிய மூத்தக் குடிமக்களை அடையாளம் காண ஒரு வழிமுறை உருவாக்கப்படலாம்,” என்று அவர் கூறினார்.

“அவர்கள் வழக்கமாக வாகனம் ஓட்டும்போது அவசரப்படவோ அல்லது துரத்தவோ மாட்டார்கள், ஏனென்றால் அவர்கள் பல்வேறு தினசரி விவகாரங்களில் குறைவாகவே ஈடுபடுகிறார்கள்,” என்று அவர் கூறினார்.

முன்னதாக, புக்கிட் அமான் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறை இயக்குநர் அஸிஸ்மான் அலியாஸ், மூத்தக் குடிமக்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவதை மட்டுப்படுத்த அரசுக்குப் பரிந்துரைத்தார்.

முதியவர்கள் சம்பந்தப்பட்ட விபத்துகளுக்கு முக்கியக் காரணங்களில் ஒன்று ஆரோக்கியமாக இல்லாதபோது வாகனம் ஓட்டியது என்று அஜிஸ்மான் கூறினார்.

மூத்தக் குடிமக்கள் உடல்நலப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும், அத்துடன் அவர்கள் வாகனம் ஓட்ட தகுதியுள்ளவர்கள் என்பதை உறுதிப்படுத்த, முதலில் ஒரு மருத்துவரிடம் இருந்து கடிதம் பெற வேண்டும் என்றார்.

இருப்பினும், மூத்தக் குடிமக்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவதை மட்டுப்படுத்த அரசுக்கு ஒரு மூத்தப் போலீஸ் அதிகாரியின் பரிந்துரை என்பது அவரது தனிப்பட்ட கருத்து என்று போலிஸ் படைத் தலைவர் அக்ரில் சனி அப்துல்லா சானி கூறினார்.

சமூக ஊடகங்களில் எழுதிய ஜாஹித், மூத்தக் குடிமக்கள் வாகனம் ஓட்டும்போது மிகவும் திறமையாக இருப்பது மட்டுமல்லாமல், சாலையில் மிகவும் கவனமாக இருப்பதாகவும் கூறினார்.

கூடுதலாக, போதைப்பொருள் மற்றும் மதுபோதையில் வாகனம் ஓட்டுதல் போன்றவையும் சாலை விபத்துகளுக்குக் காரணியாக இருக்கக்கூடிய பல காரணிகள் ஒன்றாக உள்ளது என்று அவர் கூறினார்.

வயது காரணிகளின் அடிப்படையில் மட்டுமே ஓட்டுநர்களை மதிப்பிடுவது அல்லது தனிமைப்படுத்தப்பட்ட வழக்குகளைக் குறிப்பிடுவது பாகுபாட்டிற்கு வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.