கோவிட் -19 தொற்றுநோயிலிருந்து நாடு மீண்டவுடன், பொருள், சேவை வரியை (ஜிஎஸ்டி) மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் பரிந்துரைத்துள்ளார்.
அந்தப் பெக்கான் எம்பியின் கருத்துப்படி, நாட்டில் உள்ள மக்களிடையே வருமான இடைவெளியைக் குறைக்கும் இலக்கை அது அடைய உதவும்.
“ஜிஎஸ்டி வருவாய் சேகரிப்புகளை பி40 மற்றும் எம்40 குழுக்களுக்குப் பண உதவி வடிவில் விநியோகிக்க முடியும், இது அவர்கள் செலுத்திய ஜிஎஸ்டியின் மதிப்பை ஒப்பிடும்போது மிகப் பெரியது.
“அதனால்தான், வருமான இடைவெளியைக் குறைத்தல், முதலீட்டை ஈர்ப்பது மற்றும் அரசாங்கத்தின் நிதி பலத்தை வலுப்படுத்துதல் என்ற இலக்கை நாம் அடைய விரும்பினால், நாடு கோவிட்டில் இருந்து மீண்டு வரும்போது, விரைவில் ஜிஎஸ்டி முறையை மீண்டும் செயல்படுத்த வேண்டும்,” என்று இன்று மக்களவையில் 12-வது மலேசியத் திட்ட (ஆர்.எம்.கே.12) விவாத உரையின் போது அவர் கூறினார்.
2015-ல் நஜிப் நிர்வாகத்தின் போது, ஜிஎஸ்டி 6 விழுக்காடு விகிதத்தில் அமல்படுத்தப்பட்டது.
இந்த வரி சர்ச்சைக்குரியதாகக் கருதப்படுகிறது, ஏனெனில் இது மக்களுக்குச் சுமையாகவும், பொருட்களின் விலை உயர்வுக்கு ஒரு காரணமாகவும் கூறப்பட்டது. பின்னர், அது மீண்டும் விற்பனை மற்றும் சேவை வரி (எஸ்.எஸ்.தி.) உடன் மாற்றப்பட்டது.
இருப்பினும், ஜிஎஸ்டியை ஆதரிப்பவர்கள், பல பலவீனங்கள் இருப்பதாகக் கூறப்படும் எஸ்எஸ்டியுடன் ஒப்பிடும்போது வரி அமைப்பு மிகவும் வெளிப்படையானது மற்றும் வரி ஏய்ப்பு நடவடிக்கைகளைக் குறைக்க முடியும் என்று கருதுகின்றனர்.
எஸ்எஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதும் பொருட்களின் விலை உயர்ந்தது
சையத் சதிக் சையது அப்துல் இரஹ்மானின் கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக, முன்னாள் நிதியமைச்சரான நஜிப், ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டபோது கறுப்பு பொருளாதாரத்தால் ஏற்பட்ட கசிவு 25 விழுக்காட்டிலிருந்து 10 விழுக்காடாக சுருங்கிவிட்டது.
“எனவே, உண்மையில் ஜிஎஸ்டிக்கு முன்பு மோசமாக இருந்தது, ஜிஎஸ்டி நாட்டிற்கும் மக்களுக்கும் பயனளிக்கிறது.
“இரத்து செய்யப்பட்ட மூன்று வருடங்களுக்குப் பிறகு, ஜிஎஸ்டிக்குப் பதிலாக எஸ்எஸ்டி மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டதும், அடிப்படை பொருட்களின் விலை கணிசமாக அதிகரித்தது. பொருட்களின் விலை உயர்வுக்கு ஜிஎஸ்டி முக்கிய காரணம் என்ற மக்களுடைய கருத்து பொய்யானது மற்றும் முற்றிலும் தோல்வியடைந்தது.” என்றார் அவர்.
14-வது பொதுத் தேர்தலில், பக்காத்தான் ஹராப்பான் புத்ராஜெயாவைக் கைப்பற்றிய பிறகு, எஸ்எஸ்டி மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஜிஎஸ்டி மலேசியாவில் கருப்புப் பொருளாதாரத்தையும் குறிவைக்கிறது, எந்தவொரு வரியையும் செலுத்தாமல் தப்பியவர்கள், இது ஒரு வருடத்திற்கு முன்பு ரிம300 பில்லியன் ஆகும்.