எல்.எச்.டி.என். : தரவு கசிவுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை

சட்டவிரோதமாக விற்கப்பட்டதாகக் கூறப்படும் தனிப்பட்ட தரவு குறித்த செய்தி அறிக்கைகளுடன் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று உள்நாட்டு வருவாய் வாரியம் (எல்.எச்.டி.என்.) வலியுறுத்தியுள்ளது.

இன்று ஓர் அறிக்கையில், மைஐடெண்டிட்டி (MyIdentity) அமைப்பு பயன்படுத்துபவர்களும் அந்த அமைப்பின் உரிமையாளர் அல்லாதவர்களும்தான், தரவு கசிவுக்குக் காரணம் என்று எல்.எச்.டி.என். கூறியது.

“உள் விசாரணை நடத்தப்பட்டது, குற்றம் சாட்டப்பட்டபடி தரவு மற்றும் தகவல் கசிவு இல்லை.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பான அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஆராய, தேசியப் பதிவுத் துறை, தேசிய மின்மவெளி பாதுகாப்பு முகவம், தேசியப் பாதுகாப்பு மன்றம் ஆகியவற்றுடன் எல்.எச்.டி.என். இணைந்து பணியாற்றி வருகிறது.

“எல்.எச்.டி.என். மூலம் சேமிக்கப்பட்ட அனைத்து தரவும் தகவல்களும் பாதுகாப்பானவை என்று எல்.எச்.டி.என். உத்தரவாதம் அளிக்கிறது, ஏனெனில் இது அங்கீகரிக்கப்பட்ட தரவு பாதுகாப்பு தொழில்நுட்பத்துடன் பாதுகாக்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

எல்.எச்.டி.என். பொதுமக்களை ஏமாற்றுகளில் இருந்து எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்துகிறது. மேலும், ஏதேனும் தகவல்கள் தேவைபட்டால் எல்.எச்.டி.என்.-ஐ தொலைபேசி மூலம் (03-8911 1000 / 03-8911 1100) அல்லது அவர்களின் இணையதளம் மூலம் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறது.

முன்னதாக இன்று, தொழில்நுட்ப வலைப்பதிவு Lowyat.net மைஐடெண்டிட்டி அமைப்பு மூலம் பெறப்பட்டதாகக் கூறப்படும் தனிப்பட்ட தரவு இயங்கலையில் 0.2 BTC-க்கு (எழுதும் நேரத்தில் சுமார் RM35,030.79) விற்கப்பட்டது.

இந்தத் தரவுத் தொகுப்புகள் உலகம் முழுவதிலுமிருந்து திருடப்பட்ட தனிப்பட்ட தகவல்களை விற்பனை செய்வதில் பிரபலமான இயங்கலை மன்றங்களில் விளம்பரப்படுத்தப்படுகின்றன.

விற்பனையாளரால் காட்டப்பட்ட மாதிரியின் அடிப்படையில், தரவுத் தொகுப்பில் பிறந்த தேதி, மின்னஞ்சல், பாலினம், அஞ்சல் முகவரி, தொலைபேசி எண், மைகார்ட் எண், நிரந்தர முகவரி, இனம் மற்றும் மதம் ஆகியவை ‘json’ வடிவத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

எல்.எச்.டி.என். -இன் இணையதளம் மூலம் “myIdentity API” இலிருந்து பெறப்பட்ட தரவு – 4 மில்லியன் உள்ளீடுகளை உள்ளடக்கியது என்று விற்பனையாளர் கூறினார்.