15-வது பொதுத் தேர்தலில் (ஜிஇ15), போட்டியிடவிருக்கும் நாடாளுமன்றம் மற்றும் மாநிலச் சட்டமன்ற இட விநியோகங்களை உடனடியாக முடிவு செய்ய தேசியக் கூட்டணியின் (தே.கூ.) உறுப்புக் கட்சிகள் முடிவு செய்துள்ளன.
அம்னோ அல்லது தேசிய முன்னணியிடமிருந்து எந்தப் பதிலும் இதுவரை கிடைக்காத நிலையில், தே.கூ. தலைவர் முஹைத்தீன் யாசின் அக்கூட்டணியில் இட ஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை அடுத்த வாரம் தொடங்க உள்ளதாகக் கூறினார்.
“இட ஒதுக்கீடு குறித்து விவாதிக்க, அம்னோ அல்லது தே.மு. -இடமிருந்து எங்களுக்கு எந்தத் தகவலும் வரவில்லை. அம்னோவின் எதிர்காலம் குறித்து எங்களுக்கு உறுதியாக தெரியவில்லை, அதன் தலைமையிடமிருந்து தெளிவான அறிக்கை எதுவும் இல்லை.
“ஆனால் உண்மையில், அரசாங்கத்தில் நாங்கள் ஒன்றாக இருக்கிறோம். மற்ற கட்சிகள் முடிவு செய்யும் வரை நாங்கள் காத்திருக்க விரும்பினால், அது தேசியக் கூட்டணியின் ஜிஇ விவகாரங்களைச் சீர்குலைக்கும்,” என்று அவர் இன்று கோலாலம்பூரில், கட்சியின் தலைமை அலுவலகத்தில் தே.கூ. உச்சமன்றக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கியப் பிறகு செய்தியாளர் கூட்டத்தில் பேசினார்.
எனவே, தீபகற்ப மலேசியாவுக்கான இடங்களுக்குப் பெர்சத்து, பாஸ் மற்றும் கெராக்கான் இடையேயும், சபாவுக்கான இடங்களுக்குப் பார்டி சோலிடாரிட்டி தானா ஆயேர்கு (எஸ்ஏடிஆர்) மற்றும் பார்டி ப்ரோக்ரெசிஃப் சபா (எஸ்ஏபிபி) இடையேயும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று பெர்சத்து கட்சியின் தலைவருமான அவர் கூறினார்.
செப்டம்பர் 13-ம் தேதி, மத்திய அரசு மற்றும் பக்காத்தான் ஹராப்பான் இடையே கையெழுத்திடப்பட்ட மாற்றம் மற்றும் அரசியல் நிலைத்தன்மை பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஆதரிக்கும் முடிவை எடுப்பது தவிர, இன்று தே.கூ. உச்சமன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்களில் இதுவும் ஒன்று என்று முஹைத்தீன் கூறினார்.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவது குறித்து, அவ்வப்போது தே.கூ. கருத்துகளையும் நிலைப்பாடுகளையும் தெரிவிப்பதில் பங்கு வகிக்கும் என்றார் அவர்.
மக்களவையின் அடுத்த அமர்வில் தேர்ந்தெடுக்கப்படவுள்ள மக்களவை துணை சபாநாயகர் குறித்து, தே.கூ. நிலைப்பாட்டைத் தெரிவிக்க பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப்பைச் சந்திக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.
- பெர்னாமா