சமீபத்தில், பாலிங்கில் கோவிட் -19 தடுப்பூசி போட்டதால் ஒரு பெண் மாணவி இறந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டைக் கெடா மாநிலச் சுகாதாரத் துறை (ஜே.கே.என்.) மறுத்துள்ளது.
அதன் இயக்குநர் டாக்டர் ஓத்மான் வாரிஜோ, தனது தரப்பு இந்த விவகாரம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தியதாகவும், குற்றச்சாட்டுகள் உண்மை இல்லை என்று கண்டறிந்ததாகவும் கூறினார்.
இறந்த அம்மாணவி, மலேசியக் கல்வி சான்றிதழ் (எஸ்.பி.எம்.) முடித்த இளையர் என்பது கண்டறியப்பட்டது. அவர், 5 செப்டம்பர் 2021-இல், பாலிங், துன் அப்துல் ரசாக் தடுப்பூசி மையத்தில், முதல் கோவிட் -19 தடுப்பூசியைப் பெற்றார் என விசாரணையின் முடிவுகள் கூறுகின்றன.
“19 செப்டம்பர் 2021-இல், வயிற்று வலி இருப்பதாகக் கூறிய அவருக்கு, பாலிங் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், 2021 செப்டம்பர் 25-ம் தேதி, தடுப்பூசி போடப்பட்ட 20 நாட்களுக்குப் பிறகு, அவர் மயக்கமடைந்ததால், பாலிங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரது உடல்நிலை விரைவில் மோசமடைந்தது, பின்னர் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
பிரேதப் பரிசோதனைக்காக, உடல் சுல்தானா பாஹியா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது, இரத்தக் குழாய் சிதைவு
காரணமாக அவர் இறந்துள்ளார், கோவிட் -19 தடுப்பூசிக்கும் அவர் மரணத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அவர் கூறினார்.
ஜே.கே.என். கெடா, இறந்தவரின் குடும்பத்திற்கு தனது இரங்கலைத் தெரிவித்தது. மேலும், உறுதிப்படுத்தப்படாத செய்திகளை நம்புவதை மற்றும் பரப்புவதைத் தவிர்க்கவும், கோவிட் -19 மற்றும் கோவிட் -19 தடுப்பூசி தொடர்பான உண்மையான தகவல்களைப் பெறவும் பொது மக்களை அது அறிவுறுத்துகிறது.
- பெர்னாமா