டோங் ஸோங் தலைவர், தான் தாய் கிம், நாடு முழுவதும் 63 தனியார் சீனப் பள்ளிகளுக்கு, 15 மில்லியன் ரிங்கிட் ஒதுக்க நிதி அமைச்சு அளித்துள்ளது என்று கூறினார்.
இத்தகவலைத் துணைக் கல்வி அமைச்சர் மாஹ் ஹாங் சூன் உறுதிப்படுத்தினார்.
சமீபத்தில், தனியார் சீனப் பள்ளிகள் அரசாங்கத்திலிருந்து நிதி பெறத் தொடங்கியுள்ளன என்று தான் மலேசியாகினியிடம் கூறினார்.
“செப்டம்பர் 23-ம் தேதி, 63 தனியார் சீனப் பள்ளிகளுக்கு RM15 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதி அமைச்சு அறிவித்தது,” என்று தான் கூறினார்.
கோவிட் -19 தொற்றுநோயின் விளைவாக, தனியார் பள்ளிகளின் நிதி நிலவரம் சரியில்லாத இந்நேரத்தில், இந்த நிதி ஒதுக்கீடு அவசியமான ஒன்று என்றார் அவர்.
இந்நிதியை அரசாங்கத்திடமிருந்து ஏற்பாடு செய்த மசீச தலைவர் வீ கா சியோங் மற்றும் மசீச துணைத் தலைவராகவும் இருக்கும் மாஹ் இருவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
இஸ்மாயில் சப்ரி யாகோப் தலைமையிலான, தற்போதைய அரசாங்க நிர்வாகத்தில் வீ போக்குவரத்து அமைச்சராக உள்ளார்.
ஜனவரி 29, 2021 அன்று, தனியார் சீனப் பள்ளிகளுக்கான சிறப்பு நிதிக்கு விண்ணப்பிக்க நிதி அமைச்சுக்கு வீ கடிதம் எழுதினார் என்று தான் கூறினார்.
“ஏப்ரல் 19-ஆம் தேதி, சிறப்பு நிதி அங்கீகரிக்கப்படுவதாக அக்கடிதத்திற்கு நிதி அமைச்சு பதிலளித்தது,
“செப்டம்பர் 15-ஆம் தேதி, வீ மற்றும் மா இருவரும், டோங் ஸோங்கைச் சந்தித்து, நிதியுதவி பள்ளிகளுக்கு விரைவில் அனுப்பப்படும் என்று தெரிவித்தனர்,” என்று தான் கூறினார்.
25 விழுக்காட்டினர் கல்வி கட்டணம் செலுத்தவில்லை
கோவிட் -19 தொற்றுநோயின் போது மாணவர்களின் நிதி நிலைமை மற்றும் சிரமங்களை விளக்கி, டோங் ஸோங் கல்வி அமைச்சுக்கும் நிதி அமைச்சுக்கும் ஒரு மனுவைச் சமர்ப்பித்துள்ளது.
“கடந்த ஓராண்டாக, தனியார் சீனப் பள்ளிகள் தொற்றுநோய் காரணமான சவாலான சூழ்நிலையை எதிர்கொண்டன. அவர்களுடைய பெற்றோர்களில் சிலர் வேலை இழந்ததால், 25 விழுக்காட்டிற்கும் அதிகமான மாணவர்கள் தங்கள் கல்வி கட்டணத்தை இன்னும் செலுத்தவில்லை.
“பள்ளிகள் மாணவர்களுக்கு உதவ நிதி திரட்ட வேண்டும், சிலர் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவ தங்கள் சேமிப்பைக் கூட பயன்படுத்தினர்,” என்று அவர் கூறினார்.
எனவே, நவம்பரில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் 2022 பட்ஜெட்டில் தனியார் சீனப் பள்ளிகளுக்கு அரசாங்கம் தொடர்ந்து நிதி ஒதுக்கும் என்று தான் நம்புகிறார்.
இதற்கிடையில், டிஏபி துணைப் பொதுச் செயலாளர் ங்கா கோர் மிங், தனியார் சீனப் பள்ளிகளுக்கான ஒதுக்கீடுகளுக்காக டிஏபி மற்றும் பக்காத்தான் ஹராப்பான் போராடி வருவதாகக் கூறினார்.
நேற்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், அரசாங்கம் இந்த ஒதுக்கீட்டை வழங்க, டிஏபி பொதுச்செயலாளர் லிம் குவான் எங் மற்றும் பிஎச் கூட்டணி கடுமையாக உழைத்ததாக ங்கா கூறினார்.
“பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு, நிதி அமைச்சு இறுதியாக ஒதுக்கீட்டை அங்கீகரிக்க ஒப்புக்கொண்டது. ரிம 15 மில்லியன் ஒதுக்கீடு உடனடியாக அனுப்பப்படும்,” என்று தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினருமான ங்கா கூறினார்.
2022 வரவு செலவு திட்டத்தில், சீன ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகளுக்கான ஒதுக்கீடுகளையும், தனியார் கல்லூரிகளுக்கு RM6 மில்லியன் ஒதுக்கீட்டையும் அரசாங்கம் வழங்க பிஎச் தொடர்ந்து முயற்சிக்கும் என்றும் அவர் சொன்னார்.
ஒதுக்கீடுகள் தேசியக் கூட்டணியால் தொகுக்கப்பட்டுள்ளன
இது குறித்து மேல் விவரங்கள் அறிய, நிதி அமைச்சரின் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டபோது, வீ-இடம் விளக்கம் கேட்கும்படி அது மலேசியாகினியிடம் சொன்னது; லிம் அலுவலகம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.
மலேசியாகினி இப்போது வீ மற்றும் மாஹ்`வின் பதில்களுக்காகக் காத்திருக்கிறது.
தனியார் சீனப் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட நிதி அமைச்சின் அதிகாரப்பூர்வக் கடிதத்தை மலேசியாகினி பார்த்தது, பள்ளிகளுக்கு நிதியுதவி வழங்க அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த ஆண்டு, தேசியக் கூட்டணி அரசாங்கம் தனியார் சீனப் பள்ளிகள் மற்றும் மூன்று தனியார் கல்லூரிகளுக்கான நிதியுதவியை நிறுத்தியது, அவற்றுள் சௌதர்ன் பல்கலைக்கழகக் கல்லூரி, நியூ ஏரா பல்கலைக்கழகக் கல்லூரி மற்றும் ஹான் சியாங் தொடர்புத்துறை பல்கலைக்கழகக் கல்லூரி போன்றவையும் அடங்கும்.
பிஎச் நிர்வாகத்தின் கீழ், முதல் முறையாக மத்திய அரசு 2019 பட்ஜெட்டில், தனியார் சீனப் பள்ளிகளுக்கு RM12 மில்லியன் ஒதுக்கீடு செய்தது, மேலும் அந்தத் தொகை 2020-ல் RM15 மில்லியனாக அதிகரித்தது. மூன்று தனியார் பல்கலைக்கழகக் கல்லூரிகளும் தொடர்ச்சியாக இரண்டு வருடங்களுக்கு RM2 மில்லியன் பெற்றன.