அம்னோ உச்சமன்றப் பணிக்குழுவின் உறுப்பினரான அஸலினா ஓத்மான் சையத், சட்ட மற்றும் மனித உரிமை விவகாரங்களுக்கான பிரதமரின் சிறப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தத் தகவலை, அஸலினா இன்று உறுதி செய்தார். பிரதமர் துறையில் அமைச்சராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட அவர், இஸ்மாயில் சப்ரி யாகோபிடமிருந்து நியமனக் கடிதத்தைப் பெற்றதை உறுதிப்படுத்தினார்.
தன் மீது நம்பிக்கை வைத்து, நியமனம் செய்த பிரதமருக்கு, பெங்கெராங் எம்.பி.யுமான அவர் நன்றி தெரிவித்தார்.
ஆகஸ்ட் 23-ம் தேதி, சில அம்னோ மூத்த தலைவர்களுக்கும் பெர்சத்துவுக்கும் இடையே ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், அஸலினா மக்களவை துணை சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்தார்.
அஸலினாவின் இராஜினாமா, இஸ்மாயில் சப்ரியின் அமைச்சரவையில் அவரது நியமனத்துடன் இணைக்கும் ஊகங்களைத் தூண்டியது. இருப்பினும், அம்னோ துணைத் தலைவர் அஸலினாவை தனது அமைச்சரவையில் பட்டியலிடவில்லை.
அரசாங்கக் கட்சியின் உறுப்பினராக தனது நிலை இருந்தபோதிலும், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகாரங்களை நிர்வகிக்க, அமைச்சரவையில் சேர்க்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்த எதிர்க்கட்சிகளின் ஆதரவு அஸலினாவுக்கு இன்னும் உள்ளது.
இதற்கிடையில், அம்னோ மூத்தத் தலைவர் ஷாஹிர் சமத், அஸலினாவைப் பிரதமரின் ஆலோசகராக நியமித்தது அவரது உறுதியின் அடிப்படையில் பொருத்தமானது என்று விவரித்தார்.
அஸலினா ஓர் ஆலோசகராக நியமிக்கப்படுவது மட்டுமல்லாமல், சட்டத்துறை தலைவர் பதவியை வகிக்கவும் தகுதியானவர் என்று ஷாஹிர் விளக்கினார்.
“அவசரகாலத்தின் போது, இடைநீக்கம் செய்யப்பட்ட பிரதிநிதிகள் சபையின் பெருமையைப் பாதுகாப்பதில் அஸலினா உறுதியாக இருந்தார், அவர் உறுதியான கொள்கைகள் கொண்டவர் என்பதை நிரூபித்தார்.
“இஸ்மாயில் சப்ரி அசலினாவைச் சட்ட மற்றும் மனித உரிமை ஆலோசகராக நியமித்தது, ஒரு துணிச்சலான நடவடிக்கை, ஏனென்றால் அவர் எந்தப் பாத்திரத்தைக் கொடுத்தாலும் அதைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளும் ஒருவர்,” என்றார் அவர்.