பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராகிம், அடுத்த பொதுத் தேர்தலில் பிஎச் வேட்பாளர்கள் ஒற்றைச் சின்னத்தைப் பயன்படுத்துவது குறித்து கட்சியின் அடிமட்ட மக்களிடம் ஆலோசனை பெறுவதில் தான் இன்னும் ஈடுபட்டுள்ளதாகக் கூறினார்.
இந்த விஷயத்தில், பிஎச் நிலைபாடு குறித்து கருத்து கேட்டபோது, “இன்னும் விவாதத்தில் இருக்கிறோம்,” என்று கூறினார்.
“நான் என் சொந்த முடிவை எடுக்க முடியாது, எனவே மாநில மற்றும் கிளை மட்டங்களில் பிகேஆரின் ஆலோசனையை நான் கேட்க வேண்டும்,” என்று, தெலுக் கெமாங்-இல் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் கூறினார்.
“ஆனால் அது எதுவாக இருந்தாலும், பிஎச் ஒரு வலுவான மற்றும் ஒற்றுமையான கூட்டாக இருக்க வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.
நேற்று, பல டிஏபி மற்றும் அமானா தலைவர்கள், ஆகஸ்ட் 23-ம் தேதி, பிஎச் தலைமை மன்றம் கூட்டணியின் சின்னத்தை ஜிஇ15-இல் அதன் அனைத்து வேட்பாளர்களும் பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்ததாகக் கூறினர்.
அவர்கள் கடந்த ஏப்ரல் மாதம், ‘பிஎச் தீர்வு’ மற்றும் அதன்பிறகு வந்த ‘போர்ட்டிக்சன் பிரகடனம்’ ஆகியவற்றைத் தொட்டு பேசினர்.
செப்டம்பர் 3-ம் தேதி, பிஎச் உறுப்புக் கட்சிகள், கொள்கையளவில் ஒரு சின்னத்தைப் பயன்படுத்த ஒப்புக்கொண்டதாக அன்வார் கூறினார். மேலும், கடந்த பொதுத் தேர்தலில் பிகேஆர் சின்னம் பயன்படுத்தப்பட்டது, ஏனெனில் அப்போதைய சங்கங்களின் பதிவுத் துறை (ஆர்.ஓ.எஸ்.) பிஎச் கூட்டணியை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
பின்னர், செப்டம்பர் 16-ம் தேதி, அன்வர் இந்த விஷயம் இன்னும் விவாதிக்கப்படுவதாகவும், இரு தரப்பினரும் “வலுவான வாதங்களைக்” கொண்டிருந்ததாகவும் கூறினார்.