பாசிர் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அஹ்மத் ஃபத்லி ஷாரி, சீனத் தனியார் பள்ளிகளுக்கு 15 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு குறித்து விளக்கம் அளிக்குமாறு கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்தார்.
பாஸ் இளைஞர் துணைத் தலைவருமான அவர், தனியார் தஹ்ஃபிஸ் பள்ளிகளுக்கு எவ்வளவு ஒதுக்கீடு செய்யப்பட்டது என்றும் கேள்வி எழுப்பினார்.
“நாடாளுமன்ற அமர்வின் ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் திட்டமிடப்பட்ட அமைச்சரவை கேள்வி பதில் அங்க நேரத்திற்கு நான் கேள்விகளை அனுப்பியுள்ளேன்.
“கேள்வி எழுந்தால், நாங்கள் கல்வி அமைச்சரின் பதிலுக்காகக் காத்திருக்கிறோம். எப்படியிருந்தாலும், இது தெளிவுபடுத்தப்பட வேண்டிய பிரச்சினை,” என்று அவர் இன்று முகநூல் பதிவு ஒன்றில் கூறினார்.
முன்னதாக, நிதி அமைச்சு நாடு முழுவதும் உள்ள 63 சீனத் தனியார் பள்ளிகளுக்கு ரிம15 மில்லியன் ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளித்துள்ளதாக மலேசியாகினி செய்தி வெளியிட்டது.
இந்த விஷயத்தை டோங் ஸோங் தலைவர், தான் தாய் கிம் மலேசியாகினியிடம் தெரிவித்தார், அதனை துணைக் கல்வி அமைச்சர் மா ஹாங் சூன் உறுதிப்படுத்தினார்.
“செப்டம்பர் 23-ம் தேதி, 63 சீனத் தனியார் பள்ளிகளுக்கு, RM15 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதி அமைச்சு அறிவித்தது,” என்று தான் கூறினார்.
முன்னதாக, மலேசியத் தஹ்ஃபிஸ் அல்-குர்ஆன் மதரஸா அசோசியேஷன் (பெர்மாத்தா அல்-குர்ஆன்), அரசாங்க அறிவுறுத்தல்களின்படி, மலேசியாவில் 64.7 விழுக்காடு தஹ்ஃபிஸ் மஹாத் செயல்பாடுகளை மூட வேண்டும் என்று கண்டறிந்தது.
பெர்மாத்தா அல்-குர்ஆன் தலைவர், மனோலிதோ முகமட் டஹ்லான், நாட்டில் உள்ள 512 தஹ்ஃபிஸ் மஹாத்-இல், தனது தரப்பினர் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இது அறியப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அது தவிர, 11.7 விழுக்காடு மஹத் தஹ்ஃபிஸ், அனைத்து ஊழியர்களையும் பணிநீக்கம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது; 52 விழுக்காடு பாதி சம்பளத்தை மட்டுமே கொடுக்கக் கூடிய நிலையிலும் மூன்று மாதங்களுக்கு மேல் நீடிக்க முடியாத நிலையில் 34.4 விழுக்காடும் உள்ளதாகக் கண்டறிந்ததாக அவர் விளக்கினார்.
38.1 விழுக்காட்டினர் மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறையின் (ஜக்கிம்) உதவியைப் பெறவில்லை, பெற்றோர்களின் இயலாமை காரணமாக 85.4 விழுக்காடு மஹாத் பாதி அல்லது குறைவான கட்டணங்களைப் பெற்று வருகின்றனர்.