பிரதமர் : டிசம்பர் மாத வாக்கில் நாடு கடந்த பயணம் சாத்தியமாகலாம்

பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப், டிசம்பர் மாத வாக்கில் அல்லது நாட்டில் பெரியவர்களுக்கான தடுப்பூசி விகிதம் 90 விழுக்காட்டை எட்டும்போது, மலேசியர்கள் வெளிநாடு செல்ல தயாராகலாம் என்றார்.

மாநிலங்களுக்கு இடையேயான பயணத்துடன், நாட்டின் எல்லை திறக்கும் நடவடிக்கையும் முன்கூட்டியே நடக்க வாய்ப்பிருப்பதாக தெரிவித்த இஸ்மாயில் சப்ரியின் கூற்றை உத்துசான் மலேசியா மேற்கோள் காட்டியது.

“ஆமாம், டிசம்பர். ஒருவேளை முன்கூட்டியே. நாங்கள் மாநில எல்லைகளைத் திறப்போம். 90 விழுக்காடு தடுப்பூசி போடப்பட்டதும் நாட்டின் எல்லைகள் திறக்கப்படலாம்.

“மாநில எல்லைகள் கூடிய விரைவில் திறக்கப்படும், ஏனென்றால் இப்போது 85.5 விழுக்காட்டை அது எட்டியுள்ளது, அதாவது இன்னும் இரண்டு வாரங்களில் அது முழுமையாக நடக்கலாம்,” என்று கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் இஸ்மாயில் சப்ரி கூறினார்.

நாட்டின் எல்லைகள் திறக்கப்பட்டதும், மை-டிரவல்பாஸ்-க்கு (My-TravelPass (MTP) பொதுமக்கள் விண்ணப்பிக்கத் தேவையில்லை என்று அவர் கூறினார்.

“நாட்டை விட்டு வெளியேற நாம் இனி மை-டிரவல்பாஸ்-ஐப் பதிவு செய்யத் தேவையில்லை, ஆனால் தனிமைப்படுத்தல் இன்னும் அப்படியே உள்ளது,” என்று அவர் விளக்கினார்.

ஜொகூரைச் சார்ந்த தொழிலாளர்கள், தங்கள் தினசரிப் பணிகளைத் தொடர அனுமதிக்க சிங்கப்பூருடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

“நாங்கள் விவாதத்தைத் தொடர்கிறோம், ஏனென்றால் எங்களிடம் இரண்டு உள்ளது, பரஸ்பர பசுமை கோடு (ஆர்ஜிஎல்), சிங்கப்பூர் அதை நிறுத்தியுள்ளது, நாம் நிறுத்தவில்லை. கடந்த வாரம் நான் ஜொகூருக்குச் சென்றேன், ஆர்ஜிஎல் திறக்கப்படுவதற்காக சிங்கப்பூருடன் கலந்துபேசும்படி ஜொகூர் மந்திரி பெசாரிடம் கேட்டுக்கொண்டேன்.

“ஆனால், மிக முக்கியமாக, தொழிலாளர்களின் தினசரி பயணம், நூறாயிரக்கணக்கான மக்கள் அதில் சம்பந்தப்பட்டுள்ளனர். சிங்கப்பூர் அதன் எல்லையை இன்னும் திறக்கவில்லை. இது முக்கியமானது, ஏனென்றால் ஜொகூர் பாருவிலிருந்து செல்லும் பயணிகள் திடீரென உள்ளே நுழைய அனுமதிக்கப்படவில்லை. இதனால் பலர் ஒரு வருடத்திற்கும் மேலாக அவதிப்பட்டு வருகின்றனர்,” என்றார் அவர்.