அடுத்தப் பொதுத் தேர்தலில், தேசிய முன்னணி (பிஎன்) டிக்கெட்டின் கீழ் போட்டியிட, மக்கள் சக்தி கட்சிக்கு இடம் வழங்கப்படும் என்று பிஎன் தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி அறிவித்ததில் கட்சிக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்று மஇகா தேசியத் தலைவர் எஸ் ஏ விக்னேஸ்வரன் கூறினார்.
“பிரச்சனை இல்லை. தேர்தல் காலத்தில் இந்த விஷயத்தை விவாதிக்கலாம். இந்த நேரத்தில், பிஎன் உறுப்புக் கட்சிகளுக்கும் மஇகா போட்டியிட்ட இடங்களுக்கும் இடையே எந்த மோதலும் இல்லை. அந்த அடிப்படையில், மக்கள் சக்திக்கான இடங்களை அறிவிப்பதில் எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.,” அவர் இன்று கோலாலம்பூர், மஇகா தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.
மஇகா பொறாமை கொள்ளவில்லை, எந்தக் கட்சியும் போட்டியிடுவதைத் தடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
“நாங்கள் யாரையும் தடுக்க மாட்டோம். ஆனால், மஇகாவுக்கு எது முக்கியம் என்பது பற்றிய எங்கள் கருத்துக்களை நாங்கள் கொடுப்போம். மற்றவர்களுக்கு இடங்கள் கொடுக்கப்படுவதால் மஇகாவுக்குக் கோபம் அல்லது பொறாமை என்று சில தரப்பினர் சொன்னால் அது உண்மையில்லை. உண்மையில், நாங்கள் ஒருபோதும் அந்தப் பிரச்சினைகளைச் சிந்தித்ததில்லை.
“ஜாஹிட் சொன்னது என்னவென்றால், நாங்கள் (அம்னோ) மக்கள் சக்தி போட்டியிட ஒரு வாய்ப்பை வழங்குவோம், மேலும் இந்தப் பிரச்சினையைப் பிஎன் நிலையில் விவாதிக்கக் கொண்டு வருவோம். இப்போது வரை, இந்த விஷயம் விவாதிக்கப்படவில்லை. எனவே, நான் கருத்து சொல்வது நல்லதல்ல,” என்று அவர் சொன்னார்.
அடுத்த ஜிஇ15-இல், பிஎன்-இல் போட்டியிட, கட்சிக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று மக்கள் சக்தி வருடாந்திரப் பொதுக் கூட்டத்தில் ஜாஹிட்டின் முந்தைய அறிவிப்பு குறித்து கருத்து கேட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.
அனைத்து மலேசிய இந்திய மேம்பாட்டு முன்னணி (ஐபிஎஃப்), மலேசிய முஸ்லீம் இந்தியக் காங்கிரஸ் (கிம்மா) மற்றும் மலேசிய ஐக்கிய இந்தியர் கட்சி (எம்ஐயுபி) ஆகியவற்றுக்கும் ஜாஹிட் இடங்களை வழங்குவார் என்று தான் நம்புவதாகவும் விக்னேஸ்வரன் கூறினார்.
“நாங்கள் இதை பிஎன் (சந்திப்பு) மட்டத்தில் பின்னர் விவாதிப்போம்.
“தற்போது, மஇகா பிரதிநிதிகள் 11 நாடாளுமன்ற இடங்களில் இறங்கியுள்ளனர். பொருத்தமான இடங்களில் நாங்கள் போட்டியிடுவோம். பொருத்தமற்றவற்றைப் பிஎன் உறுப்புக் கட்சிகளுக்குப் போட்டியிட விட்டுவிடுவோம்,” என்று அவர் கூறினார்.
பதிவுக்காக, மக்கள் சக்தி, ஐபிஎஃப், கிம்மா, எம்ஐயுபி, பார்டி சிந்தா மலேசியா, மலேசிய இந்தியர் நீதி காங்கிரஸ் (கே.கே.ஐ.எம்) மற்றும் சிறுபான்மை உரிமைகள் நடவடிக்கை கட்சி (மீரா) ஆகியவை ‘பிஎன் -நட்பு’ கட்சிகள் அல்லது பிஎன் கூட்டணிக் கட்சிகள் என அறியப்படுகின்றன.
இதற்கிடையில், பிஎன் முறையே அம்னோ, மசீச, மஇகா மற்றும் பிபிஆர்எஸ் ஆகிய நான்கு கட்சிகளைக் கொண்டுள்ளது.
அக்டோபர் மற்றும் நவம்பரில் மஇகா தேர்தல்
முன்னதாக, இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரி, கிளை, மாநிலம் மற்றும் தேசியப் பிரிவுகளுக்கான கட்சி தேர்தல் தேதியைத் தீர்மானிக்க, இன்று மதியம் மஇகா மத்திய செயற்குழு கூட்டத்திற்கு விக்னேஸ்வரன் தலைமை தாங்கினார்.
அக்டோபர் 10-ஆம் தேதி வேட்பாளர்கள் நியமனம் நடைபெறும்; அக்டோபர் 17-ல் தேர்தல் நடைபெறும் என்றார் அவர். கிளை நிலையில் வேட்புமனுத் தேதி அக்டோபர் 17-உம் தேர்தல் அக்டோபர் 24-உம் நடைபெறும்.
மாநில அளவிலான தேர்தல், 23 மத்தியச் செயற்குழு உறுப்பினர்கள், மூன்று உதவித் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நவம்பரில் நடைபெறும்.
நவம்பர் தொடக்கத்தில் தீபாவளி பண்டிகை காரணமாக, நாங்கள் இரண்டு வார விடுமுறை எடுத்துள்ளோம்.
“அடுத்து, மாநில அளவிலான வேட்பாளர்கள் நியமனம், மத்திய செயற்குழு உறுப்பினர் பதவிகள், துணை மற்றும் உதவித் தலைவர்கள் வேட்புமனு தாக்கல் நவம்பர் 20-ம் தேதி நடைபெறும், தேர்தல் நவம்பர் 27-ல் நடைபெறும்,” என்று அவர் கூறினார்.
12 மே 2021-இல், நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடைமுறைக்கு வந்த பிறகு, கட்சி தேர்தலை நடத்தவிருக்கும் முதல் அரசியல் கட்சி மஇகா ஆகும்.