பிடிபிஆர் : `கேபிஎம் ஆய்வு கண்டுபிடிப்புகளை ரட்ஸி படிக்கவில்லையா` – தியோ

சுய இல்லிருப்பு கற்பித்தல் மற்றும் கற்றலை (பிடிபிஆர்) மாணவர் ஏற்றுக்கொள்ளும் நிலை குறைவாக இருப்பதால், அதன் செயல்திறன் குறித்து முன்னாள் துணைக் கல்வி அமைச்சர் தியோ நீ சிங் கேள்வி எழுப்பினார்.

அச்செயல்முறையின் போது, ​​ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கிடையேயான தொடர்புகள் மற்றும் சக மாணவர்களுக்கிடையேயான தொடர்புகள் மற்றும் கற்றல் அமர்வுகளின் வழிகாட்டுதல்கள் மேலும் குறைக்கப்படும் என்று தியோ கூறினார்.

“மலேசியக் கல்வி அமைச்சின் ஓர் ஆய்வு 57.5 விழுக்காடு மாணவர்கள் மட்டுமே பிடிபிஆர்-இன் போது நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் ஆசிரியர்களால் வழங்கப்பட்ட பணிகளை அல்லது பயிற்சிகளை வெற்றிகரமாக முடிக்கின்றனர்.

“எனவே என் கேள்வி என்னவென்றால், பிடிபிஆர், சுய பிடிபிஆர்-ஆக மாற்றப்படும் போது, கொடுக்கப்படும் பணிகளை அல்லது பயிற்சிகளை முடிக்கும் மாணவர்களின் விழுக்காடு இன்னும் குறையுமல்லவா?

“மிக முக்கியமாக, பிகேபி காலத்தில் 36.0 விழுக்காடு மாணவர்கள் மட்டுமே வீட்டில் கற்றல் பொருட்களைப் பயன்படுத்தி சொந்தமாக கற்றுக்கொள்ள முடிந்தது என்பதையும் ஆய்வின் கண்டுபிடிப்புகள் காட்டுகின்றன,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.

கட்டங்கட்டமாக பள்ளியை மீண்டும் திறக்கும் செயல்முறை, நேற்று முன்தினம் குறிப்பிட்ட மாணவர்களின் சேர்க்கையுடன் தொடங்கியது.

நேரடிக் கற்றல் கற்பித்தலுக்காக பள்ளிக்குச் செல்லாத குழுவினர், பிடிபிஆர்-ஐ தொடருவர்.

கல்வியமைச்சின் ஆய்வின் அடிப்படையில், பிடிபிஆர்-ஐ செயல்படுத்துவது குறைவான செயல்திறன் கொண்டது என்று கூலாய் எம்பியுமான அவர் கூறினார்.

“பிடிபிஆர் ஏன் இன்னும் முன்மொழியப்படுகிறது? கல்வி அமைச்சர் முகமட் ரட்ஸி ஜிடின், தனது சொந்த அமைச்சின் ஆய்வின் முடிவுகளைப் படிக்கவில்லையா?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

பள்ளியை மீண்டும் திறப்பதற்கான கல்வியமைச்சின் எந்தவொரு முயற்சியையும் தான் ஆதரித்ததாக தியோ மேலும் கூறினார்.

“ஆனால், சுய பிடிபிஆர் ஒரு பயனுள்ள முறையா?” என்று அவர் மேலும் கேட்டார்.