மலாக்கா சட்டமன்றம் கலைக்கப்பட்டது, அரசியல் நெருக்கடியைச் சமாளிக்க மாநிலத் தேர்தல்

இறுதியில், மாநில அரசைத் தீர்மானிக்கும் உரிமையை வாக்காளர்களுக்குத் திருப்பி அளிப்பதன் மூலம் மலாக்கா அரசியல் நெருக்கடி தீர்க்கப்படும்.

சற்று முன்னர், மலாக்கா மாநிலச் சட்டமன்ற சபாநாயகர், அப்துல் ரவுஃப் யூசோ, மாநிலங்களவையில் தேர்தலை நடத்துவதற்கான முன்மொழிவை, யாங் டி-பெர்த்துவா நெகிரி முகமட் அலி ருஸ்தம் ஏற்றுக்கொண்டதாக அறிவித்தார்.

மலாக்கா சட்டமன்றம் இன்று கலைக்கப்பட்டதாக அப்துல் ரவுப் அறிவித்தார்.

மலாக்கா சட்டமன்றத்தைக் கலைக்கும் ஆலோசனையை, முதல்வர் சுலைமான் முகமட் அலி இன்று வழங்கியதாகவும், அது ஒப்புக்கொள்ளப்பட்டதாகவும் அப்துல் ரவுப் தெரிவித்தார்.

அரசியலமைப்பின் படி, சட்டமன்றம் கலைக்கப்பட்ட பிறகு பொதுத் தேர்தல் 60 நாட்களுக்குள் நடத்தப்பட வேண்டும்.

முன்னாள் முதல்வர் இட்ரிஸ் ஹரோன் தலைமையிலான நான்கு அரசு சட்டமன்ற உறுப்பினர்கள் தேசிய முன்னணி – தேசியக் கூட்டணி அரசாங்கத்திற்கான ஆதரவைத் திரும்பப் பெறுவதாகத் தங்கள் நிலைப்பாட்டை அறிவித்த பிறகு, அரசியல் குழப்பத்தால் மலாக்கா பாதிக்கப்பட்டது.

“மலாக்கா சட்டமன்றக் கலைப்பு பற்றிய அறிவிப்பு இன்று, அக்டோபர் 5, 2021, வர்த்தமானியில் வெளியிடப்பட்டது,” என்று அப்துல் ரவுஃப் இன்று நேரலையில் ஒளிபரப்பப்பட்ட செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

மலாக்காவில் தேர்தல் நடந்தால், கடுமையான எஸ்.ஓ.பி.க்களுடன் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் முன்பு உறுதியளித்தார்.

கடந்த ஆண்டு, சபா மாநிலத் தேர்தல் நடைபெற்றபோது கோவிட் -19 தொற்றுநோய் மீண்டும் ஏற்படுவதைத் தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

நேற்றிரவு நிலவரப்படி, மலாக்காவில் பெரியவர்களில் 88.2 விழுக்காட்டினருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கோவிட் -19 இன்னும் அச்சுறுத்தலாக இருக்கும்போது, மாநிலத் தேர்தல்களைச் செயல்படுத்துவது பற்றி கேட்டபோது, தேர்தல் ஆணையம் (இசி) பொருத்தமானதாகக் கருதப்படும் ஒரு முறையைப் பரிந்துரைக்கும் என்று ​​அப்துல் ரவுப் கூறினார்.

“தேசியப் பாதுகாப்பு மன்றமும் மலேசிய சுகாதார அமைச்சும் தொடர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

இன்று மலாக்கா சட்டமன்றம் கலைக்கப்பட்டதால், மாநிலத் தேர்தல் முடியும் வரை மாநிலத்தை இடைக்கால அரசு நிர்வகிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.