நேற்று, மலாக்கா மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாநிலத் தேர்தலைத் (பிஆர்என்) தடுக்க அவசரநிலையை அறிவிக்க வேண்டிய அவசியமில்லை என்று மூத்த வழக்கறிஞர் ஹனிஃப் கத்ரி அப்துல்லா கூறினார்.
அதற்குப் பதிலாக, பிஆர்என் பாதுகாப்பாக நடத்தப்படுவதற்கு இறுக்கமான செந்தர இயங்குதல் நடைமுறைகள் (எஸ்ஓபி) மட்டுமே தேவை என்று ஹனிஃப் கத்ரி கூறினார்.
கூட்டாட்சி அரசியலமைப்பின் அடிப்படையில், மலாக்கா தனது தேர்தலை 60 நாட்களுக்குள் நடத்த வேண்டும், அது நடக்காமல் தடுப்பதற்கான ஒரே வழி யாங் டி-பெர்த்துவான் அகோங் அவசரகால நிலையை அறிவிப்பதுதான்.
“ஆனால், நான் தனிப்பட்ட முறையிலும் தொழில்ரீதியாகவும் மலாக்காவில் பிஆர்என்-ஐத் தடுப்பதற்காக மட்டும் அவசரநிலையை அறிவிக்க முடியாது என்று நினைக்கிறேன்.
“தேர்தல் ஆணையம் (இசி) மலாக்காவில் பிஆர்என்-ஐ கண்டிப்பான நெறிமுறைகள் மற்றும் தேவையான எஸ்ஓபி-களுடன் இணக்கமாக கையாள முடியும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.
மாநிலத்தில் ஏற்பட்ட சமீபத்திய நெருக்கடியால், மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்பட்ட பிறகு, மலாக்காவில் பிஆர்என் நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி கருத்து கேட்டபோது ஹனிஃப் கத்ரி இவ்வாறு கூறினார்.
மலாக்கா சட்டமன்ற சபாநாயகர், அப்துல் ராவுஃப் யூசோ, திங்கட்கிழமை மலாக்கா சட்டமன்றம் கலைக்கப்பட்டதை, நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
சட்டத்தை மீறவில்லை
முன்னாள் முதல்வர் இட்ரிஸ் ஹரோன் தலைமையிலான நான்கு அரசு சட்டமன்ற உறுப்பினர்கள் தேசிய முன்னணி-தேசியக் கூட்டணி அரசாங்கத்திற்கான தங்கள் ஆதரவைத் திரும்பப் பெறுவதாக அறிவித்ததால் மலாக்காவில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது.
மேலும் விரிவாக பேசிய ஹனிஃப் கத்ரி, கோவிட் -19 பரவுவதைத் தடுக்க பல தீர்வுகள் உள்ளன, பிரச்சார நடவடிக்கைகளை இயங்கலையில் நடத்துவது உட்பட.
வேட்புமனு தாக்கலையும் இதே போன்று செய்யலாம் என்றார்.
தேர்தல் நோக்கங்களுக்காக, கட்சி தலைமை மாநிலம் முழுவதும் பயணம் செய்ய அனுமதிக்கக்கூடாது என்றும் ஹனிஃப் கத்ரி வலியுறுத்தினார்.
மேலும், இது ஒரு பொதுத் தேர்தல் அல்ல, மாநில அளவிலான தேர்தல் என்று அவர் கூறினார்.
“நாம் எதிர்கொள்ளும் தேசியப் பிரச்சினைகளையும் நாட்டின் சட்டங்களையும் அவர்களால் மீற முடியாது என்பதை அரசியல்வாதிகள் உணர வேண்டும்,” என்று அவர் கூறினார்.
ஹனிஃப் கத்ரியின் கூற்றுப்படி, பிஆர்என்-ஐ அவர் விரும்புகிறார், ஏனெனில் தேர்தலின்றி, அதேக் கட்சியைச் சேர்ந்த மற்றொரு தலைவர் புதிய முதல்வராக வருவது ஜனநாயகத்தைத் துஷ்பிரயோகம் செய்ய வழிவகுக்கும் என்று அவர் நினைக்கிறார்.
“மலாக்காவில், அரசாங்கக் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களே அரசாங்கத்தைக் கவிழ்த்தனர், பிஆர்என் இல்லையென்றால் நமக்கு என்ன கிடைக்கும்? அதேக் கட்சியைச் சேர்ந்த மற்றொரு தலைவர் முதலமைச்சர் ஆவார்.
“இது நம்மிடம் உள்ள ஜனநாயக முறையைத் தவறாகப் பயன்படுத்துவதாகும்,” என்று அவர் கூறினார்.
எனவே, “அதிகாரம் வழங்கக்கூடாத குற்றவாளிகளை” அடையாளம் காணும் உரிமையை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், அவர்களை மீண்டும் தேர்ந்தெடுக்கக்கூடாது என்றும் ஹனிஃப் கத்ரி மக்களை வலியுறுத்தினார்.
எதிர்காலத்தில் தேர்தல் நடைபெறும் போது, அது நாட்டிற்கு ஒரு சமிக்ஞையாக இருக்கும் என்றார்.
பதிவுக்காக மலாக்கா சட்டமன்றம் 28 இடங்களைக் கொண்டுள்ளது. பல சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்களால் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் கவிழ்ந்த பிறகு, 17 இடங்களைக் கொண்டுள்ள தேசிய முன்னணி-தேசியக் கூட்டணி மாநில அரசானது, தற்போது எதிர்க்கட்சியில் 11 இடங்கள் உள்ளன.