அன்வர் : பிஎச்-புத்ராஜெயா உடன்படிக்கையின் வளர்ச்சி மெதுவாக உள்ளது, வேண்டுமென்றே தாமதமாகிறது

நாடாளுமன்றம் | அண்மையில், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (எம்.ஓ.யு.) கையெழுத்திட்ட பிறகு, அரசாங்கம் உறுதியளித்த சீர்திருத்தங்களின் முன்னேற்றத்தில் பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) திருப்தி அடையவில்லை.

புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு ஒரு மாதம் ஆகிவிட்டது, ஆனால் வாக்குறுதிகளை நிறைவேற்ற புத்ராஜெயா எந்தவொரு உறுதிப்பாட்டையும் காட்டவில்லை என்று பிஎச் தலைவர் அன்வர் இப்ராகிம் கூறினார்.

இன்று மக்களவையில் நடந்த விவாதத்தின் போது, ​​”பிரதமர் கூறியது போல, வேறு பல நடவடிக்கைகள் ஜனநாயகத்தின் மெய்பொருள், வெளிப்படைத்தன்மை மற்றும் ஒத்துழைப்பு உணர்வுக்கு முரணாக இருக்கிறது,” என்று அவர் கூறினார்.

முன்னதாக, பிரதமர் துறையின் அமைச்சர் முஸ்தபா முகமது, வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதைத் தவிர, பொருளாதாரத்தைப் புதுப்பிக்க நாட்டில் அரசியல் நிலைத்தன்மை தேவை என்ற பிரச்சினையை எழுப்பினார்.

எதிர்க்கட்சித் தலைவரான அன்வர், முஸ்தபா கூறிய “அறிக்கையைத் திருத்த” தலையிட்டார்.

“ஆரம்பத்தில் நாங்கள் ஆதரித்த உடன்படிக்கை, அரசியல் தட்பவெப்பத்தைக் குறைத்து, முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்ற அவரது அறிக்கையைத் திருத்த, அமைச்சருக்கு நான் இங்கு விளக்கமளிக்க விரும்புகிறேன்.

“ஆனால், நாங்கள் (உடன்படிக்கை வளர்ச்சியில்) திருப்தி அடையவில்லை என்று நான் இன்று கூற விரும்புகிறேன், ஏனெனில் அது மெதுவாகவும் வேண்டுமென்றே தாமதமாகவும் நகர்கின்றது,” என்று அவர் கூறினார்.

ஷெரட்டன் நகர்வுக்குப் பிறகு பல்வேறு நிகழ்வுகளைத் தொடர்ந்து, நாட்டில் அரசியல் கொந்தளிப்பைத் தணிக்கும் நடவடிக்கையாக பிஎச் மற்றும் மத்திய அரசு செப்டம்பர் 13-ம் தேதி, அரசியல் மாற்றம் மற்றும் நிலைத்தன்மை பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

புரிந்துணர்வு ஒப்பந்தம் நிர்வாக சீர்திருத்தத்திற்கு உறுதியளிக்கிறது. மற்றவற்றுடன், இது நாடாளுமன்றச் சீர்திருத்தம் மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்தை உள்ளடக்கியது.