பண்டோரா காகிதத்தை வெளிப்படுத்துவது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் – அன்வர்

நாடாளுமன்றத்தின் சபாநாயகரால் முந்தைய பிரேரணை நிராகரிக்கப்பட்டதை அடுத்து, பண்டோரா ஆவணங்களை வெளிப்படுத்துவது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகிம் முறையீடு செய்தார்.

“பண்டோரா ஆவணங்கள் வெளிப்படுத்தல் மீதான விவாதம் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

“இந்தப் பிரேரணையின் மேல்முறையீடு விரைவில் ஆராயப்பட்டு, விரைவில் பரிசீலிக்கப்படும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் ஒரு முகநூல் பதிவில் கூறினார்.

முன்னதாக, அக்டோபர் 4-ஆம் தேதி, அன்வர், இரகசிய நிதி கோப்புகளை உள்ளடக்கிய பண்டோரா ஆவணங்களின் வெளிப்பாட்டை மக்களவையில் விவாதிக்க முன்மொழிந்ததாகக் கூறினார்.

இந்தப் பிரேரணை, நாடாளுமன்றப் பிரதிநிதிகள் சபையின் விதிகள் 18 (1)-இன் நிலைப்பாட்டு உத்தரவின் கீழ், மக்களவை சபாநாயகருக்கு வழங்கப்பட்டது.

எனினும், பண்டோரா ஆவணம் வெளிப்பாடு குறித்து உடனடியாக விவாதிப்பதற்கான பிரேரணையை சபாநாயகர் அஸார் அஸீஸான் ஹருன் நேற்று நிராகரித்தார்.

மாறாக, இந்த விவகாரத்தை நாடாளுமன்றத் தேர்வுக் குழு (பொருளாதாரம்) அல்லது அரச விசாரணை ஆணையம் (ஆர்சிஐ) ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.

சர்வதேசப் புலனாய்வு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பால், (ஐசிஐஜெ) பெறப்பட்ட பண்டோரா ஆவணம், 35 உலகத் தலைவர்கள், 330-க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் 91 நாடுகளிலும் பிராந்தியங்களிலும் உள்ள பொது அதிகாரிகளின் நிதி இரகசியங்களை வெளிப்படுத்தியது.

பட்டியலிடப்பட்டவர்களில் முன்னாள் நிதியமைச்சர் டைம் ஜைனுடின், நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸ், அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி மற்றும் செலாயாங் எம்பி வில்லியம் லியோங் ஆகியோரும் அடங்குவர்.