மாநிலத் தேர்தலை (பிஆர்என்) ஒத்திவைக்க, மலாக்கா மாநிலத்தில் அவசரகால நிலை பிரகடனத்தை அறிவிக்குமாறு, தற்போது யாங் டி-பெர்த்துவான் அகோங்கின் செயல்பாடுகளை நகர்த்தும் துணை யாங் டி-பெர்த்துவான் அகோங் சுல்தான் நஸ்ரின் ஷாவுக்கு ஆலோசனை வழங்க அரசு இன்னும் முடிவு செய்யவில்லை.
பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப், இந்த விஷயத்தைப் பரிசீலிப்பதற்கு முன்பு சுல்தான் நஸ்ரின் ஷா பல தரப்பினரிடமிருந்து விளக்கங்களைப் பெறுவார் என்று அரசாங்கத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
“… இன்னும் இல்லை, நாங்கள் அமைச்சரவைக் கூட்டத்தை சற்றுமுன்னர் நடத்தினோம், நாங்கள் மலாக்காவின் நிலைமையை விவாதித்தோம், நாங்கள் இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை.
“சட்டத்துறை தலைவர், சுகாதார அமைச்சு, தேர்தல் ஆணையம் ஆகியோரிடமிருந்து நடப்பு யாங் டி-பெர்த்துவான் அகோங் (சுல்தான் நஸ்ரின் ஷா) ஒரு விளக்கத்தைப் பெறுவார் என்று எங்களுக்குத் தெரியவந்துள்ளது. ஆக, அதுவரை நாங்கள் காத்திருப்போம்.
“சுல்தான் நஸ்ரின் ஷா விளக்கங்களைப் பெற்ற பிறகு, அடுத்த வாரம் அமைச்சரவை முடிவெடுக்கும்,” என்று அவர் கோலாலம்பூர், அங்காசாபுரியில் ‘மலேசியக் குடும்பம்’ துவக்க விழாவிற்குப் பிறகு ஊடகங்களைச் சந்தித்தபோது கூறினார்.
கடந்த திங்கட்கிழமை, முதல்வர் சுலைமான் அலி தலைமையிலான மலாக்கா மாநில அரசு, நான்கு முன்னாள் அரசாங்கச் சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களது ஆதரவைத் திரும்பப் பெற்றதால் சரிந்தது.
அதைத் தொடர்ந்து, யாங் டி-பெர்த்துவா நெகிரி, மொஹமட் அலி ருஸ்தாமிடம் அரசாங்கத்தைக் கலைக்க சுலைமான் விண்ணப்பித்தார்.
அந்த நான்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இட்ரிஸ் ஹரோன் (பிஎன் – சுங்கை ஊடாங்), நோரிஸாம் ஹசான் பக்தி (சுயேட்சை – பெங்காலான் பத்து), நோர் அஸ்மான் ஹசான் (பிஎன் – பந்தாய் குண்டோர்) மற்றும் நூர் எஃபெண்டி அஹ்மாட் (பெர்சத்து – தெலுக் மாஸ்) ஆவர்.
அதே நேரத்தில், தேர்தல் ஆணையம் 60 நாட்களுக்குள் தேர்தலை நடத்த கடமைப்பட்டுள்ளது.
கோவிட் -19 தொற்றுநோய் கட்டுக்குள் கொண்டுவரப்படுவதற்கு முன்பு, தேர்தல்களை நடத்த ஒப்புக்கொள்ளாத அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பிலிருந்தும், இந்த சட்டமன்றக் கலைப்பு விமர்சனத்திற்கு உள்ளானது.
மலாக்கா தற்போது தேசிய மீட்பு திட்டத்தின் மூன்றாம் கட்டத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.