ரட்ஸி : சுமார் 80 விழுக்காடு மாணவர்கள் ஒரு மருந்தளவு தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்

12 முதல் 17 வயதுக்குட்பட்ட மாணவர்களில், கிட்டத்தட்ட 80 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு மருந்தளவு கோவிட் -19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் என்று மூத்த கல்வி அமைச்சர் ரட்ஸி ஜிடின் கூறினார்.

முகநூல் பகிர்வு ஒன்றில், கல்வி அமைச்சு 12 முதல் 17 வயது வரையிலான இளையர்களுக்கான தடுப்பூசி திட்டத்தை அல்லது இளம் வயதினருக்கான தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தை (பிக்) அமல்படுத்துவதில், செப்டம்பர் முதல் சுகாதார அமைச்சுடன் இணைந்து நெருக்கமாக செயல்படுவதாகக் கூறினார்.

கல்வி அமைச்சும் சுகாதார அமைச்சும் பள்ளி மாணவர்களுக்கான ‘இளையர் பிக்’ திட்டத்தைச் செயல்படுத்தும் நிலை தொடர்பான தகவல்களை வழங்குவதற்கான சிறந்த அணுகுமுறையை ஆராய, பல விவாதங்களை நடத்தியுள்ளதாகவும், மற்ற தடுப்பூசி தரவுகளைப் போல தகவல்களைப் பொதுமக்களுக்குப் பகிர முடியும் என்றும் அவர் விளக்கினார்.

“கோவிட்நவ் இணையதளத்தில் கல்வி அமைச்சின் கீழ் உள்ள பள்ளிகளுக்கான தடுப்பூசி விவரங்கள் குறித்த புதிய அம்சத்தை சுகாதார அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தப் புதிய அம்சத்தின் மூலம், பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் தங்கள் குழந்தையின் பள்ளி மாணவர்களின் தடுப்பூசி விகிதத்தைச் சரிபார்க்கலாம். Https://covidnow.moh.gov.my/school என்ற இணைப்பின் மூலம் சரி பார்ப்பு செய்யலாம்,” என்று அவர் கூறினார்.

இந்த முயற்சி சமூகத்திற்கு, குறிப்பாக தாய்மார்கள், தந்தையர்கள் மற்றும் பாதுகாவலர்களுக்கு வெளிப்படையான தகவலை வழங்க முடியும் என்று ரட்ஸி கூறினார்.

  • பெர்னாமா