பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப், முன்பு நிலுவையில் இருந்த மூன்று முக்கிய வழக்குகளை விசாரிக்க ஒரு செயற்குழு மற்றும் சிறப்பு விசாரணை குழுவை அமைக்க வேன்டும் என்று அறிவித்ததை டிஏபி எம்.பி.க்கள் வரவேற்றனர்.
தீயணைப்பு வீரர் முஹம்மது அடிப் முகமட் காசிமின் மரணம், முன்னாள் சட்டத்துறை தலைவர் தோமி தாமஸ் தனது புத்தகத்தில் கூறிய குற்றச்சாட்டுகள் மற்றும் புலாவ் பத்து பூத்தே வழக்கு தொடர்பான சர்ச்சை குறித்து விசாரிக்க ஒரு சிறப்பு விசாரணை குழு மற்றும் செயற்குழுவை அமைக்க அமைச்சரவை ஒப்புக்கொண்டதாக இஸ்மாயில் நேற்று அறிவித்தார்.
இருப்பினும், புக்கிட் கெலுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்பால் சிங், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) கட்டிடத்தில் மர்மமான முறையில் இறந்துபோன தியோ பெங் ஹாக் மரணம் போன்ற பிற வழக்குகளும் தீர்க்கப்பட வேண்டும் என்றார்.
“எம்ஏசிசி அதிகாரிகள் உட்பட, தெரியாத நபர்களின் சட்டவிரோதச் செயல்களால் தியோவின் மரணம் ஏற்பட்டது என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கண்டறிந்த போதிலும், 2012, 2014 மற்றும் 2018-இல் மூன்று சிறப்பு பணிக்குழுக்கள் நிறுவப்பட்டாலும் விசாரணை இன்னும் முடிக்கப்படவில்லை.
“இது ஒரு பணிக்குழுவின் செயல்திறன் பற்றி கடுமையான கேள்விகளை எழுப்புகிறது, நிச்சயமாக 12 வருடங்களுக்குப் பிறகு, இது தொடர்பான விசாரணை முடிக்கப்பட்டிருக்க வேண்டும்,” என்று ராம்கர்பால் ஓர் அறிக்கையில் கூறினார்.
தியோவின் மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ராம்கர்பால் கூறினார்.
இறந்தவரின் குடும்பத்தினரும், காவல்துறையினர் விசாரணையை முடிக்க வேண்டுமென உயர் நீதிமன்றத்தில் விரைவில் வழக்குத் தாக்கல் செய்வார்கள் என்று அவர் கூறினார்.
அல்தான்துயா கொலையின் மர்மம்
2005-இல், அல்தான்துயா ஷாரிபு கொலைக்கான விசாரணையில் இருந்து எந்த முடிவுகளும் ஏன் இதுவரை இல்லை என்பதையும் இஸ்மாயில் சப்ரி விளக்க வேண்டும் என்று ராம்கர்பால் கூறினார்.
“உண்மையான குற்றவாளி யார் என தீர்ப்பளிக்கப்பட்டாலும், கொலைக்குப் பின்னணியில் இயங்கியவரை இன்னும் அறிய முடியவில்லை.
“குற்றவாளிக்கு அல்தான்துயாவைக் கொல்ல எந்த உள்நோக்கமும் இல்லை என்பது தெளிவாகத் தெரிந்திருப்பதால், பின்னணியில் இயங்கியவரை அடையாளம் கண்டு வழக்குத் தொடரத் தவறியது, எதுவோ மறைக்கப்பட்டுள்ளது என்ற கருத்தை ஏற்படுத்தியுள்ளது, அந்த எண்ணம் தொடர அனுமதிக்க முடியாது.
“தியோ மற்றும் அல்தான்துயாவின் வழக்கு தீர்க்கப்பட வேண்டும், இந்தக் குடும்பங்களுக்கு ஓர் இறுதி முடிவு இருக்க வேண்டும் என்பதால், இன்றைய அரசாங்கத்திற்கு அரசியல் விருப்பம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.
இது சம்பந்தமாக, இந்த இரண்டு வழக்குகளையும் உடனடியாகத் தீர்க்க அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளை அறிவிக்குமாறு பிரதமரை அவர் கேட்டுக் கொண்டார், இல்லையென்றால், அதில் ஏதோ மறைக்கப்பட்டுள்ளது என்ற கருத்தை மட்டுமே உருவாக்கும்.
இதற்கிடையில், லிம் குவான் எங், தியோவின் மரணம் மற்றும் போலீஸ் காவலில் உள்ள மற்ற இறப்புகள் குறித்து விசாரிக்க ஒரு சிறப்பு பணிக்குழுவை அமைக்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் தேசிய வழக்கறிஞர் இட்ருஸ் ஹருனின் தற்போதைய செயல்திறனை ஆராய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
“இந்தச் சிறப்புப் பணிக்குழுவை உருவாக்குவது பழிவாங்கும் அரசியல் நோக்கம் அல்ல, ஆனால் நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
“தீயணைப்பு வீரர் அடிப்பின் தீர்க்கப்படாத வழக்கை பார்க்க பிரதமர் அறிவித்த சிறப்புப் பணிக்குழுவுக்கு டிஏபி எந்தவொரு ஆட்சேபனையும் இல்லை, இது மத்திய அரசின் தோல்வியின் வெளிப்படையான ஒப்புதல்,” என்று பாகான் எம்.பி.யான லிம் கூறினார்.
எதிர்க்கட்சியில் இருந்த போது, இன்றைய அரசாங்கத் தலைவர்கள் அப்போது பக்காத்தான் ஹராப்பான் அரசு அடிப்’பின் கொலையாளிகளைக் கைது செய்யவில்லை என்று, அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்ததாகவும் லிம் கூறினார்.
“இப்போது அவர்கள் அரசாங்கத்தில் இருக்கின்றனர், கடந்த 20 மாதங்களில் அடிப் வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை, யார் மீதும் குற்றம் சாட்டபப்டவில்லை, எனவே அவர்கள் ஆர்வத்தை இழந்ததாகத் தெரிகிறது,” என்று அவர் கூறினார்.