முழு மருந்தளவு தடுப்பூசி போடப்படாத தனிநபர்கள், இன்று முதல் நாடு முழுவதும் பயணிக்கலாம் எனும் அரசாங்கத்தின் அனுமதியைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய, காவல்துறையினர் அவ்வப்போது திடீர் சோதனைகளை மேற்கொள்வார்கள்.
புக்கிட் அமான் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு துறை (KDNKA) இயக்குநர் ஹசானி கஸாலி, உத்தரவை மீறுபவர்கள் மீது, மேலும் எந்த எச்சரிக்கையும் வழங்கப்படாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
“தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் கிராமத்திற்குத் திரும்புவதற்காக, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய அவ்வப்போது திடீர் சோதனைகள் செய்யப்படும்.
“மாநிலத்தைக் கடக்க விரும்புவோர், முழுமையாகத் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது, எனவே அவர்கள் அதற்கு இணங்க வேண்டும்,” என்றார்.
ஹசானின் கூற்றுப்படி, ஆர் & ஆர் (ஓய்விடம்) போன்ற பொது இடங்களில் கண்காணிப்பு குழுவின் சோதனைகள் மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
“அதைத் தவிர, தற்போதுள்ள செந்தர இயங்குதல் நடைமுறைகளுக்கு (எஸ்ஓபி) பொதுமக்கள் இணங்குவதை உறுதி செய்ய காவல்துறையினர் அவ்வப்போது கண்காணிப்பு மற்றும் சோதனைகளை மேற்கொள்வார்கள்.
“மாநிலங்களுக்கு இடையேயான இயக்கங்களைக் கட்டுப்படுத்த இனி சாலைத் தடைகள் இல்லை என்பதை நாம் அறிவோம், ஆனால் குற்றச் செயல்கள் மற்றும் எஸ்ஓபி மீறல்களைச் சமாளிக்க ‘ஓப் பெந்தேங்’ போன்ற சாலைத் தடைகள் மற்றும் பிற நடவடிக்கைகள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்,” என்று அவர் கூறினார்.