தனது முன்னாள் கணவரால் கடத்தப்பட்டு, காணாமல் போன தனது மகளின் வழக்கை விசாரிக்க ஒரு சிறப்பு பணிக்குழுவை அமைக்குமாறு பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப்பை எம். இந்திரா காந்தி வலியுறுத்தினார்.
தீயணைப்பு வீரர் முஹம்மது ஆடிப் முகமது காசிமின் மரணம், முன்னாள் சட்டத்துறை தலைவர் தோமி தாமஸ் தனது புத்தகத்தில் கூறிய குற்றச்சாட்டுகள் மற்றும் புலாவ் பத்து பூத்தே வழக்கு தொடர்பான சர்ச்சை குறித்து விசாரிக்க ஒரு சிறப்பு செயற்குழு மற்றும் பணிக்குழுவை அமைக்க அமைச்சரவை ஒப்புக்கொண்டதாக இஸ்மாயில் அறிவித்ததைத் தொடர்ந்து இந்திரா காந்தி இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
“தனது முன்னாள் கணவரைக் கண்டுபிடித்து மகளைத் திருப்பி அளிப்பதில், காவல்துறையின் செயலற்ற தன்மையை விசாரிக்க முன்னாள் நீதிபதிகள் அடங்கிய சிறப்பு குழுவை அமைக்க இந்திரா காந்தி பிரதமரை வலியுறுத்தினார்.
“2014-ஆம் ஆண்டு, ஈப்போ உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததிலிருந்து கடந்த ஏழு ஆண்டுகளில் காவல்துறையினரிடமிருந்து எந்தவொரு வளர்ச்சியும் இல்லை என்பது நியாயமற்றது,” என வழக்கறிஞர்கள் ராஜேஷ் நாகராஜன் மற்றும் சஸ்ப்ரீத்ராஜ் சிங் சோஹன்பால் ஆகியோர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தனர்.
2009-ஆம் ஆண்டில், அவரது தந்தை முஹம்மது ரிதுவான் அப்துல்லா – முன்பு கே பத்மநாதன் என அறியப்பட்டவர் – இஸ்லாத்திற்கு மாறி, அப்போது குழந்தையாக இருந்த பிரசனாவுடன் தப்பி ஓடினார்.
ரிதுவான் ஒருதலைப்பட்சமாகப் பிரசனாவையும், அவர்களது இரண்டு குழந்தைகளையும் இஸ்லாத்திற்கு மாற்றிய பிறகு, ரிதுவானும் இந்திராவும் சட்ட வழிகளைப் பயன்படுத்தினர்.
2014-ஆம் ஆண்டில், ஈப்போ உயர் நீதிமன்றம் தந்தையிடமிருந்து பிரசானாவை அழைத்துச் செல்லுமாறு போலீசாருக்கு உத்தரவிட்டது, அதே நேரத்தில் 2016-இல், ஃபெடரல் நீதிமன்றம் ரிதுவானை கைது செய்யுமாறு காவற்துறை தலைவருக்கு (ஐஜிபி) உத்தரவிட்டது.
இருப்பினும், 2014 முதல், மூன்று தேசியக் காவற்படை தலைவர்கள் மாறிய பிறகும், வழக்கு இன்னும் தீர்க்கப்படவில்லை, இதுவரை ரிதுவான் கைது செய்யப்படவும் இல்லை.
பிரசனாவும் ரிதுவானும் இருக்கும் இடமும் இன்னும் தெரியவில்லை.
“இந்திரா காந்தி மற்றும் அவரது மகள் பிரசானாவின் வழக்கு இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பது மிகவும் துரதிருஷ்டவசமானது.
“இந்திராவின் மகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. தாயும் குழந்தையும் 12 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்கின்றனர்,” என்று வழக்கறிஞர் கூறினார்.