பண்டோரா ஆவணங்கள் வெளிப்பாட்டை விசாரிக்க எம்ஏசிசி தேசிய வங்கியுடன் ஒத்துழைக்கும்

பண்டோரா ஆவணங்களின் வெளிப்பாடுகளை ஆய்வு செய்ய, மலேசிய தேசிய வங்கி (பிஎன்எம்) மற்றும் பிற நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) கூறியது.

மக்களவை அமர்வின் போது, இந்த விவகாரத்தை எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகிமிடம், “இந்த விவகாரத்தில் மேலும் தகவல் இருந்தால் ஒத்துழைக்குமாறு,” ஆணையம் கேட்டுக் கொண்டது.

நேற்றிரவு, ஒரு சுருக்கமான அறிக்கையில் எம்ஏசிசி அவ்வாறு கூறியது.

நேற்று, டிஏபி தலைமை செயலாளர் லிம் குவான் எங், இந்த வெளிப்படுத்தலில் ஆணையம் ஏன் மலேசியர்களை விசாரிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

பண்டோரா ஆவணங்கள் சர்வதேசப் புலனாய்வு இதழியல் மையத்திற்கு (ஐசிஐஜே) கசிந்த பல ஆவணங்களைக் குறிக்கிறது.

கடல் கடந்து வங்கிக் கணக்குகள் மற்றும் நிறுவனங்களை அமைக்க அல்லது நிர்வகிக்க வாடிக்கையாளர்களுக்கு உதவும் பல நிறுவனங்களிலிருந்து தகவல்கள் வந்துள்ளன.

மலேசியர்களில், நிதி அமைச்சர் தெங்கு ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஜீஸ், துணை நிதி அமைச்சர் யமானி ஹஃபேஸ் மூசா, அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி, செலாயாங் நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம் லியோங் மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் டைம் ஜைனுடின் ஆகியோர் அடங்குவர்.

வெளிநாட்டு நிறுவனங்களுடன் நடத்தப்பட்ட கையாளுதல்கள் – ஒரு நிறுவனத்தின் உரிமையாளராக இருப்பது அல்லது இயக்குநர்கள் குழுவில் உறுப்பினராக இருப்பது –  சட்டத்திற்கு எதிரானது அல்ல என்றும், கடல் கடந்த நிறுவனங்கள் தொடர்புடைய எந்தவொரு சொத்து அல்லது வருமானத்திற்கும் செலுத்த வேண்டிய அனைத்து வரிகளும் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

முன்னதாக, பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப், தவறான நடத்தைக்கான ஆதாரங்கள் இருந்தால், சம்பந்தப்பட்ட தனிநபர்கள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார்.