எதிர்க்கட்சித் தலைவராக ஒரு மாதத்திற்கு RM33.5k பெற அன்வர் ஒப்புக்கொள்ளவில்லை

அன்வர் இப்ராகிம் எதிர்க்கட்சித் தலைவராகப் பெறும் மாதாந்திரச் சம்பளம் மற்றும் கொடுப்பனவை ஏற்றுக்கொள்ளவில்லை.

நேற்றிரவு ஓர் அறிக்கையில், பக்காத்தான் ஹராப்பான் தலைவரான அன்வர், அந்தப் பணத்தை ஏழைகளுக்குத் திருப்பிவிட உள்ளதாகக் கூறினார்.

பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப்பின் சலுகைக் கடிதத்தின் அடிப்படையில், எதிர்க்கட்சித் தலைவர் மாதாந்திரச் சம்பளம் RM33,560.20 மற்றும் மூன்று வருட காலத்திற்கு ஆடைக் கொடுப்பனவாக RM9,000 பெறுவார் என்று கூறினார்.

அன்வரின் கூற்றுப்படி, எதிர்க்கட்சித் தலைவரால் பெறப்படும் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் இதர வசதிகள் இங்கே.

  • RM14,907.20 மாதச் சம்பளம்
  • பொழுதுபோக்கு உதவித்தொகைக்கு மாதம் RM12,320
  • சிறப்பு கட்டணம் செலுத்த மாதத்திற்கு RM1,500
  • வீட்டுவசதி கொடுப்பனவு மாதம் RM4,000
  • வீடு பராமரிப்பு கொடுப்பனவு மாதம் RM833
  • RM6,000 குளிர்கால ஆடை கொடுப்பனவு (மூன்று வருடங்களுக்கு ஒரு முறை)
  • RM1,500 அதிகாரப்பூர்வ ஆடை கொடுப்பனவு (மூன்று வருடங்களுக்கு ஒரு முறை)
  • RM1,500 ‘கருப்பு கழுத்து பட்டை’ ஆடை கட்டண கொடுப்பனவு (மூன்று வருடங்களுக்கு ஒரு முறை)
  • அதிகாரப்பூர்வக் கார் மற்றும் அதிகாரப்பூர்வப் பணிகளுக்குத் தனிப்பட்ட வாகனத்தைப் பயன்படுத்துதல்

“ஓர் அமைச்சருக்கு இணையான வேறு சில வசதிகளை, என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. உண்மையில், நான் அந்த நிதியை ஏழை மக்கள் நிதிக்கு அனுப்புவேன்,” என்று அவர் கூறினார்.

மேலும், தனது அலுவலகத்திற்குக் கூடுதல் ஒதுக்கீட்டை வழங்கி எந்தவிதச் சீரமைப்பையும் செய்ய வேண்டாம் என்று நாடாளுமன்றத்தில் கூறியதாகவும் அவர் சொன்னார்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அமைச்சருக்கு இணையாக மாற்றுவது பிஎச் மற்றும் அரசாங்கத்தால் கையொப்பமிடப்பட்ட மாற்றம் மற்றும் அரசியல் நிலைத்தன்மை பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் உள்ளடக்கங்களில் ஒன்றாகும்.

இருப்பினும், வழங்கப்பட்ட அங்கீகாரத்திற்காகவும், எதிர்க்கட்சித் தலைவருக்கு அலுவலகம் மற்றும் அதிகாரிகள் போன்ற பிற வசதிகளை ஒதுக்குவதற்கும் இஸ்மாயிலுக்கு அன்வர் நன்றி தெரிவித்தார்.

“எதிர்க்கட்சித் தலைவருக்கு இந்த அலுவலகத்தை வழங்குவது, எந்த அரசாங்கக் கொள்கையையும் நாங்கள் கேள்வி கேட்காமல் ஆதரிப்போம் என்று அர்த்தமல்ல என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன்.

“பிரதமர் எனக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளபடி, இந்த முடிவு எதிர்க்கட்சித் தலைவரின் பங்கைப் பாதிக்காது. நான் வழக்கம் போல் எனது கடமைகளைத் தொடர்ந்து செய்வேன்.

“நாடு ஜனநாயகத்தின் பாதையில் இருப்பதை உறுதி செய்ய, சமநிலை அம்சம் மேலும் தீவிரப்படுத்தப்படும்,” என்று அவர் மேலும் கூறினார்.