நேற்று சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, அடிமட்ட மக்கள் கூட்டணி (மார்ஹேன் கூட்டணி), கோவிட் -19 தொற்றினால் மோசமடைந்து வரும் மக்கள் பிரச்சினைகளை எழுப்பியது.
மார்ஹேன் கூட்டணி (காபுங்கான் மார்ஹேன்) என்றப் பெயரைப் பயன்படுத்தி, B40 மற்றும் B20 குழுக்களைச் சார்ந்த மலேசியர்களை அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர் (B20 மிகக் குறைந்த வருமானக் குழுவாக கருதப்படுகிறது).
மார்ஹேன் ஒன்றுகூடல் 2021 தொடர் நிகழ்ச்சிகள், அக்டோபர் 12-ஆம் தேதி முதல் நடத்தப்பட்டு வருகின்றன.
முறைசாரா துறை தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள், ஓராங் அஸ்லி மற்றும் விவசாயத் துறை தொழிலாளர்கள் தொடர்பான பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்கும் விரிவரங்க நிகழ்ச்சிகள் மூலம், அக்டோபர் 12-ஆம் தேதி முதல் மார்ஹேன் ஒன்றுகூடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
பிஎஸ்எம் மத்தியச் செயற்குழு உறுப்பினர் கார்த்தி லெனின், மலிவு விலை வீடுகள் பிரச்சினையைத் தொட்டு பேசுகையில், தற்போதைய குறைந்தபட்ச ஊதியமான RM1,200, RM70,000 வரையிலான வீட்டுக்கடன் பெறுவதற்கு மட்டுமே அனுமதிப்பதாகக் கூறினார்.
“ஆனால் RM70,000 மதிப்புள்ள வீட்டை நாம் எங்கே பார்க்கிறோம்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
கார்த்தியின் கூற்றுப்படி, அரசாங்கம் B20 குழுவினர் வாடகையில் வசிக்க இன்னும் அதிகமான மக்கள் வீட்டுத்திட்டத்தின் கீழ் வீடுகளை (பிபிஆர்) கட்ட வேண்டும், அத்துடன் B40 குழுவிற்கு “வாடகையில் வீடு வாங்குதல்” திட்டத்தை வழங்க வேண்டும்.
“B40 குழுவில் உள்ள பலர் வீட்டுக் கடன்களுக்குப் பணம் செலுத்த முடியாது, எனவே வாடகையில் வீடு வாங்கும் திட்டமே அவர்கள் இறுதியாக ஒரு சொந்த வீட்டைப் பெற உதவும்,” என்று அவர் கூறினார்.
நம்பிக்கை நிதி
மூலம் மட்டுமே வர்த்தகம் செய்யக்கூடிய மலிவு விலை வீடுகளை நிர்மாணிக்க அரசாங்கம் ஓர் அறக்கட்டளை நிதியை உருவாக்க முடியும், இதன் மூலம் சந்தைக்கு வெளியே மலிவு விலை சொத்துக்களைப் பெறும் உத்தரவாதம் இருக்கும்.
அரசாங்க நிலத்தில் ஆரம்பகாலக் குடியேற்றங்களைக் கட்டாயமாக இடிக்கும் பிரச்சினையையும் அவர் எழுப்பினார். விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஓராங் அஸ்லி ஆர்வலர் தீஜா யோக் சோபில் மற்றும் பிஎஸ்எம் உறுப்பினர் ஆர் காந்தி ஆகியோரும் இந்தப் பிரச்சனையை எழுப்பினர்.
அரசு நிலத்தில் உள்ள கிராமங்களை, ஓராங் அஸ்லி சட்டம் 1954-ன் கீழ் அரசிதழ் செய்யாததால் ஓராங் அஸ்லி நில உடைமை பிரச்சனை பெரும்பாலும் எழுகிறது என்று தீஜா கூறினார்.
சம்பந்தப்பட்ட நிலத்தில், மேம்பாட்டுத் திட்டங்களுக்கான எந்தவொரு பேச்சுவார்த்தையும் பெரும்பாலும் கிராமத் தலைவர் மற்றும் ஓராங் அஸ்லி மேம்பாட்டுத் துறையை (ஜாகோவா) மட்டுமே உள்ளடக்கி உள்ளது, இதனால் ஆட்சேபனைகளைக் கூறுவது கடினம் என்றார் அவர்.
“நிலம் அரசாங்கத்திற்குச் சொந்தமானது என்றால், சில நேரங்களில் அவர்கள் நிலத்தில் பயிரிடப்படும் பயிர்களுக்கு மட்டுமே ஈடுசெய்கிறார்கள், அதற்கும் உத்தரவாதமல்ல,” என்று தீபகற்ப மலேசியாவின் ஓராங் அஸ்லி கிராம வலைபின்னலின் தலைவருமான அவர் கூறினார்.
ஜாகோவாவின் மூலம் மத்திய அரசு, மாநில அரசு நிறுவனங்கள் மற்றும் என்ஜிஓ-க்கள் பிரச்சனைக்குத் தீர்வு காண ஒன்றாக வேலை செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.
‘வேலைவாய்ப்பு சிக்கல்கள்’
அரசாங்க வளாகங்களில் பாதுகாவலர்கள் மற்றும் ஒப்பந்தத் துப்புரவுத் தொழிலாளர்கள் சார்பாகப் பேசிய ஹுசின் முகமது, கோவிட் -19 தொற்று, ஏற்கெனவே திருப்தியற்ற விதிமுறைகளையும் வேலை நிலைமைகளையும் கொண்டுள்ள இந்தத் துறைகளை மேலும் மோசமாக்கியுள்ளது என்றார்.
பாதுகாவலராக பதினொரு வருட அனுபவம் கொண்டுள்ல ஹுசின், அவரது ஒப்பந்தம் ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் முடிவடைவதால், நீண்ட கால ஊழியராக எந்தவொரு நன்மையும் பெறவில்லை என்றார்.
“மூன்று வருடங்களுக்குப் பிறகு, எனக்கு 12 நாட்கள் ஆண்டு விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.
“ஆனால், மூன்று வருடங்களுக்கு ஒரு முறை, நான் ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டியுள்ளதால், வருடாந்திர விடுப்பு இன்னும் ஆறு நாட்களாகவே உள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.
தனியார் நிறுவனங்களுடனான பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சேவைகளுக்கான குத்தகை முறையை மறுபரிசீலனை செய்யுமாறு அரசாங்கத்தை ஹுசின் வலியுறுத்தினார். இந்தத் துறையில் உள்ள தொழிலாளர்கள் வேலை உறுதியற்ற தன்மை மற்றும் தொழிலாளர்களாக தங்கள் மனித உரிமைகள் புறக்கணிக்கப்படும் அபாயத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஹாரித் ஃபைசால் எழுப்பிய முறைசாரா துறை ஊழியர்களுக்கும் இதே கதிதான்.
தொழிலாளர் துறை கணக்கெடுப்பின்படி, மலேசியாவில் 18 விழுக்காடு பணியாளர்களைக் கொண்டுள்ள இந்தத் துறையில் உள்ள தொழிலாளர்கள், பெரும்பாலும் எந்த விதமான சமூகப் பாதுகாப்பிலும் இல்லை என்று அவர் கூறினார்.
ஊழியர் சமூகப் பாதுகாப்பு பங்களிப்புகள், காப்பீடு மற்றும் குறைந்தபட்ச ஊதிய விதிகளுடன் இணங்குதல் ஆகியவற்றை இது உள்ளடக்கியது.
முறைசாரா தொழிலாளர்கள் வீட்டு வேலைகளில் ஈடுபடுவது மட்டுமல்லாமல், ஈ-ஹெயிலிங் மற்றும் பி-ஹெயிலிங் டிரைவர்களும் அடங்குவர் – கோவிட் -19 தொற்று நோய்க்குப் பிறகு, இந்த இரண்டு வேலைப் பிரிவுகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக ஹரித் கூறினார்.
விரிவரங்கில் நடந்த மார்ஹேன் ஒன்றுகூடல் 2021, உள்ளூர் இசைக்கலைஞர்களின் நிகழ்ச்சிகளுடன் நேற்றிரவு முடிவடைந்தது.